முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன மாநாட்டை புறக்கணித்தது இந்தியா

திங்கட்கிழமை, 15 மே 2017      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்  : ஒரே மண்டலம், ஒரே பாதை’ என்ற சீனாவின் சர்வதேச வர்த்தக மாநாடு பெய்ஜிங்கில்  தொடங்கியது. இந்த மாநாட்டை இந்தியா புறக்கணித்தது.

உலகிற்கு தலைமை வகிக்கும் பொறுப்பை அமெரிக்காவிடம் இருந்து தட்டிப் பறிக்க சீனா காய் நகர்த்தி வருகிறது. இதற்காக ராணுவ, பொருளாதாரரீதியாக சீனா தன்னை வலுப்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ‘ஒரே மண்டலம், ஒரே பாதை’ என்ற கனவு திட்டத்தை சீனா அறிவித்துள்ளது. அதன்படி ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளை ஒன்றிணைக்கும் வகையில் சாலை, ரயில், கடல் வழி வர்த்தக போக்குவரத்து திட்டங்களை சீனா செயல்படுத்தி வருகிறது.

பாகிஸ்தானின் குவாதர் துறைமுக திட்டம், வங்கதேசத்தில் சொனடியா துறைமுக மேம்பாட்டுத் திட்டம், இலங்கையில் கொழும்பு துறைமுக நகரம், ஹம்பாந் தோட்டை துறைமுகம், மியான் மரில் க்யான் பியூ துறைமுகம், லண்டன்-பெய்ஜிங் ரயில் பாதை என பல்வேறு திட்டங்களை சீனா மேற்கொண்டு வருகிறது.

1,500 பிரதிநிதிகள் பங்கேற்பு

இந்நிலையில் ‘ஒரே மண்டலம், ஒரே பாதை’ திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக சீன தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று 2 நாள் சர்வதேச மாநாடு தொடங்கியது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட 29 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 101 நாடுகளைச் சேர்ந்த 1,500 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, வடகொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், நேபாளம் உள்ளிட்ட நாடுகள் தங்கள் பிரதிநிதிகளை மாநாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளன. இம்மாநாட்டில் தனது கனவு திட்டத்துக்காக ரூ.7,95,800 கோடியை சீனா முதலீடு செய்கிறது.

உலகமே திரும்பிப் பார்க்கும் இந்த சர்வதேச மாநாட்டை இந்தியா புறக்கணித்துள்ளது. பாகிஸ்தானின் குவாதர் துறைமுக திட்டத்துக்காக சீனாவில் இருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் என்எஸ்ஜி, தீவிரவாதி மசூத் அசார், அருணாசலபிரதேச விவகாரங்களில் இந்தியாவுக்கு எதிராக சீனா செயல்படுகிறது.

எனவே பெய்ஜிங் சர்வதேச வர்த்தக மாநாட்டை புறக்கணித்துள்ளோம் என்று இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்