முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாவூத், ஹபீஸ் சயீதை நாடு கடத்தி வரும்படி புலனாய்வு அமைப்புகள் கோரவில்லை - மத்திய வெளியுறவு அமைச்சகம் தகவல்

திங்கட்கிழமை, 15 மே 2017      இந்தியா
Image Unavailable

மும்பை : மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் இருவரையும் பாகிஸ்தானில் இருந்து இந்தியா வுக்கு நாடு கடத்துமாறு, சம்பந்தப் பட்ட புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மும்பை தாக்குதல்

மும்பையில் 1993-ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத் தில் 260 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்தனர். முக்கிய குற்றவாளி யான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், இந்த சம்பவத்துக்குப் பின் இந்தியாவில் இருந்து தப்பி, பாகிஸ்தானில் பதுங்கினார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் கூட, தாவூத் பாகிஸ்தானில் தான் இருப்பதாகவும், அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார். ஆனால் இதை பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

இதேபோல் கடந்த 2011-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, அப் போதைய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும், தாவூத் கராச்சியில் மறைந்து வாழ்வதாக தெரிவித்திருந்தார்.

சீனா  முட்டுக் கட்டை

இதேபோல் 2008, நவம்பர் 26-ல் கடல் வழியாக மும்பைக்குள் புகுந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு ஜமாத் உத் தவா தீவிரவாத தலைவர் ஹபீஸ் சயீத் மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது தடை விதிக்கக் கோரி ஐ.நா.வில் இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா அதற்கு முட்டுக் கட்டை போட்டு வருகிறது.

இந்நிலையில் இவ்விரு குற்றவாளிகளையும் பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்தி வர மத்திய அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தது என்ற விவரத்தை தெரிவிக்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்  செய்தியாளர் பாஷா என்பவர் விண்ணப்பித்திருந்தார்.

எந்த கோரிக்கையும் வரவில்லை

அதற்கு வெளியுறவு அமைச்சகம் அளித்த பதிலில், ‘‘ஹபீஸ் சயீத் மற்றும் தாவூத் இப்ராஹிமை விசாரணைக்காக இந்தியாவுக்கு நாடு கடத்தி வர வேண்டும் என சம்பந்தப்பட்ட புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை’’ என தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்