தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் கடலூர் மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக கலெக்டர் டி.பி.ராஜேஷ் ஆய்வு

திங்கட்கிழமை, 15 மே 2017      கடலூர்
cud collector 2017 05 15

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களின் சார்பில் நடைபெற்ற  வேலை நிறுத்தத்தையொட்டி,  கடலூர் மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக கடலூர் பேருந்து நிலையத்தில் கலெக்டர் டி.பி.ராஜேஷ்   ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு 

இந்த ஆய்வின்போது கலெக்டர் , பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் மற்றும் பேருந்திற்குள் உள்ள பயணிகள் ஆகியோர்களிடம் தாங்கள் செல்லும் இடத்திற்கு பேருந்துகள் தடையின்றி இயக்கப்படுவது குறித்து கேட்டறிந்தார். பயணிகளும் தங்களுக்கு எவ்வித சிரமுமின்றி தாங்கள் செல்லும் இடத்திற்கு பேருந்து வசதி இருப்பதாக தெரிவித்தனர். மேலும் கலெக்டர்  பயணிகளுக்கு எவ்வித சிரமுமின்றி  செல்லும் இடத்திற்கு பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது கலெக்டர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

பேருந்துகளை இயக்க நடவடிக்கை

கடலூர் மாவட்டத்தைப் பொருத்தவரை 591 பேருந்துகள் இயக்கப்படுவதில் இதுவரை 241 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. கடலூர் டவுனை பொருத்தவரை 241 பேருந்துகள் இயக்கப்படுவதில் இதுவரை 163 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. பொதுமக்களிடம் பேருந்துகள் இயக்கம் குறித்து கேட்டபோது தங்களுக்கு எந்த சிரமுமின்றி தாங்கள் செல்லும் இடத்திற்கு பேருந்து வசதி உள்ளதாக தெரிவித்தார்கள். கடலூர் மாவட்டத்தில் 11 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகள் உள்ளன. அவற்றில் காவல்துறையினர் உதவியோடு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமானால் கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு செய்து  செல்லும் இடங்களுக்கு  அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

எச்சரிக்கை

அனைத்து தனியார் பேருந்து உரிமையாளர்களும் 100 சதவிகிதம் பேருந்துகளை இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். இதுதவிர பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகமானால் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பு பொருத்துவரையில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களும் குழு அமைத்து நேற்று இரவிலிருந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இதுவரை 4 இடங்களில் பேருந்து சேதம் குறித்து தகவல் பதிவாகியுள்ளது. 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெய்வேலி பகுதிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சென்றுள்ளார்கள். அனைத்து வருவாய் கோட்ட கோட்டாட்சியர்கள், காவல்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் அனைவரும் ஒவ்வொரு இடத்திலும் குழு அமைத்து முழு ஒருங்கிணைப்புடன் பொதுமக்களுக்கு எவ்வித அசவுரியங்களும்; ஏற்பாடாத வண்ணம் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், அதிகமாக பேருந்து கட்டணங்கள் வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பேருந்துகளை சேதப்படுத்துதல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது வட்டார போக்குவரத்து அலுவலர் மணி, தனியார் பேருந்து உரிமையாளர்கள், காவல்துறை அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: