இந்தியாவில் அறுவை சிகிச்சை பிரசவம் 87 சதவீதமாக அதிகரித்துள்ளது மகப்பேறு மருத்துவர்கள் தகவல்

செவ்வாய்க்கிழமை, 16 மே 2017      சென்னை

இயற்கை முறையில் நிகழும் பிரசவங்களே ஆரோக்கியமானது. பெண்களைப் பலவீனப்படுத்தும் சிசேரியன் பிரசவங்களுக்கு அவர்கள் ஒப்புக்கொள்ளக் கூடாது. இது அவர்களைப் பலவீனப்படுத்தும் என மகப்பேறு மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.

அன்னையர் தினத்தை ஒட்டி "தாய்மையைக் கொண்டாடுவோம்" என்ற கருத்தை மையமாகக் கொண்டு, சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற நிகழ்வில் மகப்பேறு மருத்துவர்கள் இதனைத் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர் கவிதா கவுதம், "தேசிய குடும்ப நல அமைச்சகம் கடந்தாண்டு எடுத்த ஆய்வில், சில மாநிலங்களில் சிசேரியன் பிரசவ எண்ணிக்கை 87 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இது 51 சதவீதமாக உயர்ந்துள்ளது. பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளில்தான் சிசேரியன் பிரசவங்கள் நடக்கின்றன. எந்த நிலையில் உள்ள பெண்ணாலும் இயற்கையாக பிரசவிக்க முடியும். உடலில் வலு இல்லை என்பதெல்லாம் உண்மையல்ல. எனவே, பெண்கள் சிசேரியன் பிரசவத்திற்கு ஒப்புக்கொள்ளக் கூடாது. அவர்களுக்குத்தான் முதலில் விழிப்புணர்வு தேவை," என்று வலியுறுத்தினார்.

அறுவை சிகிச்சை

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மருத்துவர்கள், கர்ப்பிணிகள் என்ற பெயரில் பெண்களின் சுதந்திரத்தைப் பறித்து அவர்களை முடக்கக் கூடாது என்று அறிவுறுத்தினர். "தவிர்க்க முடியாத ஆபத்தான சூழலில் மட்டுமே சிசேரியன் செய்யலாம். உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி, மொத்த பிரசவங்களில் 15 சதவீதம் வரையிலும் சிசேரியன் இருக்கலாம். அதற்கு மேல் இருந்தால், அது ஆபத்தானது. பிரசவ சூழலை எளிமையாக்க நீர்த்தொட்டிக்குள் பிரசவம், இயற்கை வழி பிரசவம் என புதிய முறைகளுக்குப் பெண்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்" என ஆலோசனை வழங்கினார் கர்ப்பிணிகளுக்கான பயிற்றுனர் ஜெயஸ்ரீ ஜெயகிருஷ்ணன்.

நிகழ்ச்சியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்தை எளிமையாக்கும் யோகா மற்றும் உடற்பயிற்சிகள் அளிக்கப்பட்டன. கர்ப்பிணிகளின் வயிற்றில் மெகந்தி வரைந்து உற்சாகப்படுத்தினர். பால் புகட்டும் முறைகள், கர்ப்ப கால பற்கள் பராமரிப்பு, குழந்தைகளைக் கையாளும் முறை, ரசாயன மருந்துகளைத் தவிர்த்து மாற்று முறையில் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் விவரிக்கப்பட்டது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: