முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளுக்கு இலவசமாக ஏரி, குளம், கண்மாய்களில் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாயிகள் நன்றி

செவ்வாய்க்கிழமை, 16 மே 2017      சேலம்
Image Unavailable

 

சேலம் மாவட்டம், எடப்பாடியில் உள்ள ஏரி, குளங்களில் இலவசமாக விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்வது குறித்து வட்ட அளவில் நடைபெறும் விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் வா.சம்பத், தலைமையில் நேற்று (16.05.2017) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் பால்பிரின்ஸிலி ராஜ்குமார் முன்னிலை வகித்தார். எடப்பாடி வட்டத்திற்கு வெள்ளக்கவுண்டனூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:

விவசாயிகள் நன்றி

தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டும், விவசாய நிலங்களில் உற்பத்தியை மேம்படுத்தி விவசாயிகளை பொருளாதார மேம்பாடு அடைய செய்யும் வகையில் ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்களை விவசாயிகள் இலவசமாக எடுத்துச் செல்ல உத்தரவிட்டார்கள். இதனடிப்படையில் இது குறித்து விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை தெளிவு படுத்திடவும், வண்டல் மண் அள்ளுவதற்கு விரும்பம் தெரிவிக்கும் விவசாயிகளின் மனுக்களை நேரடியாக பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி முகமையின் துறை அலுவலர்களிடம் வழங்குவதற்கு ஏதுவாக சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள 13 வட்டங்களிலும் விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்றைய தினம் நடைபெறுகிறது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பொதுப்பணித்துறை ஏரிகள் 36, பேரூராட்சிகள் 7, ஊராட்சிகள் 258 என மொத்தம் 301 ஏரிகள் தகுதி வாய்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எடப்பாடி வட்டத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் 8 ஏரிகளும், ஊரக வளர்ச்சித்துறையின் பராமரிப்பில் 14 கண்வாய், குளம், ஏரிகளும் என ஆக மொத்தம் 22 குளம் மற்றும் ஏரிகள் விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் நன்செய் நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 25 டிராக்டர், புன்செய் நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 30 டிராக்டர்களும், இதர பயன்பாட்டிற்கு ஒரு நபருக்கு 10 டிராக்டரும், மண்பாண்டங்கள் செய்பவர்களுக்கு 60 கன மீட்டரும் என விண்ணப்பிக்கும் மனுதாரர்களுக்கு 20 நாட்களுக்கு மிகாமல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு வருகை தந்து 320 விவசாயிகள் வண்டல் மண் அள்ளுவதற்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் உடனடியாக 5 விவசாயிகளுக்கு வண்டல் மண் அள்ளிக்கொள்வதற்கு அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த உன்னத திட்டத்தை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் வா.சம்பத், தெரிவித்தார்.

முன்னதாக இந்த கூட்டத்திற்கு வந்திருந்த விவசாயிகள் தமிழக முதலமைச்சர் அவர்களால் ஏரி, குளம், கண்மாய்களில் விவசாயிகள் இலவசமாக தங்கள் விளை நிலங்களுக்கு வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி அளித்ததற்காக அனைத்து விவசாயிகளும் எழுந்து நின்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார செயற்பொறியாளர் (சரபங்கா) குணசேகரன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ஆறுமுகம், வேளாண்மை துணை இயக்குநர், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் தெய்வசிகாமணி, உள்ளிட்ட தொடர்புடைய அலுவலங்கள் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்