முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்டத்தில் அரசு போக்குவரத்துப் பேருந்துகள் போதுமான அளவு இயங்கி போக்குவரத்து சீராக உள்ளது: அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

செவ்வாய்க்கிழமை, 16 மே 2017      வேலூர்
Image Unavailable

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் இரண்டாவது நாள் வேலை நிறுத்தத்தையொட்டி பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி பேருந்துகளில் பயணம் செய்வதற்கு ஏதுவாக போதுமான பேருந்துகள் உள்ளனவா என்பது குறித்தும், சரியான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்தும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். மேலும் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நேற்று (16.05.2017) காலை 7.00 மணிக்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி நேரடியாக ஆய்வு செய்தார். பின்னர் திருப்பத்தூர் பேருந்து பணிமனைக்கு சென்று, பேருந்துகளின் இயக்கம், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் வருகை குறித்தும் கேட்டறிந்தார். மேலும் படிப்படியாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிளை மேலாளர் தெரிவித்தார். பின்னர் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பேருந்து நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு ஆம்பூர் போக்குவரத்து வாகன பணிமனைக்கு சென்று பேருந்து இயக்கம் குறித்து கேட்டறிந்து பேருந்துகள் முழுமையாக இயக்க ஓட்டுநர்கள் நியமித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசின் சார்பில் தேவையான உதவிகள் உடனுக்குடன் செய்யப்படும் என்று அமைச்சர் அலுவலரிடம் தெரிவித்தார்.

 ஆலோசனை

பின்னர் வேலூர் பேருந்து நிலையத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பயணிகளிடம் அரசு தற்போது மேற்கொண்டுள்ள வசதி தங்களுக்கு போதுமானதாக உள்ளதா எனவும், எந்தெந்த பகுதிகளுக்கு பேருந்துகளில் இயக்கம் தேவைப்படுகிறது எனவும் கேட்டறிந்து அங்குள்ள பொது மேலாளர், வணிக மேலாளர் ஆகியோரிடம் தக்க ஆலோசனைகள் வழங்கினார். மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் ஆசியோடு மக்களின் தேவைகளுக்காக செயல்படும் அரசு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்து பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது என்றும் தெரிவித்தார். எனவே பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி தங்களின் பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் தற்காலிகமாக பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களிடம் எந்தவொரு பயமில்லாமல் பேருந்துகளை இயக்கி பொதுமக்களுக்கு உதவிடவேண்டும் என்றும் பிரச்சனைகள் ஏதும் ஏற்பட்டால் உடனடியாக அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறும் தைரியமாக பேருந்துகளை இயக்க அரசும் மாவட்ட நிர்வாகமும் அனைத்து பாதுகாப்புகளையும் எடுத்துள்ளது. எனவே நீங்கள் பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை அளிக்கவேண்டும் ன்று ஓட்டுநர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்விற்கு பின் செய்தியாளர்களிடம் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்ததாவது:-தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நேற்றும் இன்றும் நடந்து வருகிறது. மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் அரசு போக்குவரத்து ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு உத்திரவாதமும் வழங்கிய போதும் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் பொதுமக்கள் தொடர்ந்து தங்கள் அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். கலெக்டர் , போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காவல்துறையினரின் அறிவுரை மற்றும் பாதுகாப்போடு பேருந்துகள் மாவட்டத்தில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று 60 சதவிகிதமும், இன்று 70 சதவிகிதமும் மற்றும் நாளை முழுமையாகவும் இயக்க தக்க நடவடிக்கைகள் எடுக்க உத்திரவிட்டுள்ளேன். மேலும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள ஓட்டுநர்கள் தற்காலிக பணி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட்டு வாகனங்களை பாதுகாப்பாக இயக்கி வருகின்றனர். இன்று 100-க்கும் அதிகமானோர் பேருந்துகளை இயக்க தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும். தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. மேலும் தென்மாவட்டங்களுக்கு வேலூரில் இருந்து பேருந்துகள் கூடுதலாக இயக்கவும் போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்திரவிட்டுள்ளேன். எனவே பொதுமக்கள் தங்கள் பயணங்களை தைரியமாக மேற்கொள்ளலாம் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், இ.கா.ப., திருப்பத்தூர் சார் கலெக்டர் மரு.கார்த்திகேயன், இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் பாலசுப்பிரமணி (ஆம்பூர்), வருவாய் கோட்டாட்சியர் அஜய் சீனிவாசன், தமிழ்நாடு போக்குவரத்து பொது மேலாளர் ரமேஷ், வணிக மேலாளர் தசரதன், வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ், வட்டாட்சியர் ஸ்ரீராம், ஆவின் பெருந்தலைவர் வேலழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ரமேஷ், கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர்கள் செல்வம், மதியழகள், மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்