திருவண்ணாமலை மாவட்டத்தில் 93 சதவீத அரசு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 16 மே 2017      திருவண்ணாமலை
photo02

திருவண்ணாமலை மாவட்டத்தில் 93 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர்.எஸ்.இராமச்சந்திரன் கூறினார்.

பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை நகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர்.எஸ்.இராமச்சந்திரன் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக அமைச்சர், திருவண்ணாமலை செங்கம் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித் துறை விருந்தினர் மாளிகையில் மாவட்ட கலெக்டர் பிராசாந்த் மு. வடநேரே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.பொன்னி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக தி..மலை மண்டல பொது மேலாளர் நடராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் அ.அழகரசு ஆகியோருடன் மாவட்டத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எம்.எஸ்.நைனாகண்ணு, தண்டராம்பட்டு நிலவள வங்கி தலைவர் எஸ்.ஆர்.தருமலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.


பின்னர் திருவண்ணாமலை நகராட்சிய மத்திய பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேவூர்.எஸ்.இராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்பட்டு வரும் தமிழக அரசு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 93 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை மூலமாக பயனிகள், பொதுமக்கள் மற்றும் பேருந்துகளுக்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் நல்ல முறையில் இயக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: