விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 16 மே 2017      விழுப்புரம்

விழுப்புரம் கலெக்டர்அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சித் தேர்தல்கள் 2017 முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையாளர் எம்.மாலிக் பெரோஸ் கான் (ஓய்வு)  தலைமையில், கலெக்டர்இல.சுப்பிரமணியன்  முன்னிலையில் நடைபெற்றது.

 உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 5133 ஊரக மற்றும் நகர்ப்புற இறுதி வாக்குச்சாவடி பட்டியல்கள் 06.04.2017-ல் வெளியிடப்பட்டது சம்மந்தமாகவும், உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்கள் இணையதளத்தின் மூலம் உள்ளீடு செய்தல் சம்மந்தமாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்கள் யாவும் மாநில தேர்தல் ஆணைய சுற்றறிக்கையின்படி உரிய கால நிர்ணயத்திற்குள் தயார் செய்து முடித்தல் வேண்டும் எனவும், உள்ளாட்சித் தேர்தல் நடத்திட தேவையான வாக்குச்சாவடி அலுவலர்களின் விபரங்களை முன்கூட்டியே கண்டறிந்து தயார் நிலையில் வைத்திடவும், கடந்த 2016 உள்ளாட்சி தேர்தலின் பொருட்டு வேட்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட வைப்புத்தொகைகளை சம்மந்தப்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனடியாக மீள வேட்பாளர்களுக்கு உரியவாறு தகவல் அளித்து விடுதல் ஏதுமின்றி வைப்புத்தொகையை வழங்கிட தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.


தயார் நிலையில்

மேலும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் அனைத்து அறிவுரைகளையும் மற்றும் சட்டப்ப+ர்வமான ஆணைகளையும் பின்பற்றி உரிய காலகெடுவுக்குள் அனைத்து கட்ட ஆயத்த பணிகளையும் முடித்து எதிர்வரும் உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கு தயார் நிலையில் இருந்திட மாநில தேர்தல் ஆணையர் அவர்களால் அனைத்து மாவட்ட அலுவலர்கள் மற்றும் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களையும் அறிவுறுத்தப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மாவட்ட அளவில் இருப்பில் உள்ள அனைத்து வகையான தேர்தல் பொருள்களையும் கலெக்டர் முன்னிலையில் மாநில தேர்தல் ஆணையர் அவர்களால் பார்வையிடப்பட்டது.

பலர் பங்கேற்பு

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், திண்டிவனம் சார் ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேந்திரன், முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சிலோ இருதயசாமி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஜீனத்பானு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சீனிவாசன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ஜீஜாபாய், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தல் நடத்தும் அலுவலர்களாகிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வ.ஊ.), நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: