முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் முதல் பிளே ஆப் சுற்று : 5 சிக்சர்களுடன் தோனியின் அதிரடி ஆட்டத்தால் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது புனே

புதன்கிழமை, 17 மே 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை : மும்பை அணியை வீழ்த்தி ஐ.பி.எல் முதல் பிளே ஆப் போட்டியில் வெற்றி பெற்ற ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

முதலில் பேட் செய்த புனே அணி மனோஜ் திவாரி தோனி ஆகியோரது அபாரமான ஆட்டத்தினால் 162 ரன்கள் எடுத்தது, தொடர்ந்து ஆடிய மும்பை அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து தோல்வி தழுவியது. இதனையடுத்து மும்பை அணிக்கு இன்னொரு பிளே ஆப் வாய்ப்பு உள்ளது. அதில் வென்றால் மீண்டும் புனே அணியை இறுதியில் சந்திக்கலாம். கடைசி 2 ஓவர்களில் தோனி அதிரடியினால் 41 ரன்களை விளாசியது புனே சூப்பர் ஜெயண்ட்ஸ், இதுவே மும்பை தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

நடுவர் பிழையால் ரோஹித் சர்மா அவுட்

கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ந்து ஸ்பின் பந்து வீச்சில் ஆட்டமிழப்பது வாடிக்கையாகியுள்ளது. ஆனால் ஆஃப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று லெந்த்தை தவறாகக் கணித்து ஸ்வீப் ஆடினார், ஆனால் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு சென்றது. புனே அணி, வாஷிங்டன் சுந்தர் அப்பீல் செய்ய நடுவர் கையை உயர்த்தினார், தவறான தீர்ப்பு மும்பையின் தோல்விக்கு இட்டுச் சென்றுள்ளது என்றால் மிகையாகாது.

ஆனால், பார்த்திவ் படேல் அருமையாக ஆடி வந்த போது, ஸ்கோரும் இலக்கை எட்டுவதற்கு இணங்கவே சென்று கொண்டிருந்த போது இத்தகைய தருணத்தில் ரோஹித் சர்மாவின் ஷாட் தேர்வு கடும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. ஆனால் பொதுவாகவே ஐபிஎல் கிரிக்கெட்டில் சில ஷாட் தேர்வுகள், சில மோசமான பந்துவீச்சுகள், சில மோசமான களவியூகங்கள் பற்றி சந்தேகங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. இம்முறை இன்சைடு எட்ஜில் ரோஹித் சர்மா அவுட் கொடுக்கப்பட்டாலும், அந்தத் தருணத்தில் அத்தகைய ஷாட் தேர்வு ஏன் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

ரோஹித்திற்கு நடுவரின் மோசமான தீர்ப்பினால் இவர் ஆட்டமிழந்த அதே ஓவரில் அம்பாத்தி ராயுடு ரன் எடுக்காமல் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இன்னொரு முக்கியத் திருப்பமாக வாஷிங்டன் சுந்தர், கெய்ரன் பொலார்டை வீழ்த்தினார். அதன் பிறகு மும்பையின் வாய்ப்பு பற்றி பேச ஒன்றுமில்லை. 162 ரன்களை புனே அணி மிகவும் சவுகரியமாகவே வெற்றியாக மாற்றிக் கொண்டது என்றே கூற வேண்டும்.

குட் லெந்த்தையும் தாண்டிய ஃபுல் லெந்த் பந்துகளை ஸ்டம்புக்கு நேராக வீசிய வாஷிங்டன் சுந்தரின் பந்து வீச்சு பிட்சின் மந்தமான தன்மையினால் ஆடுவதற்கு மேலும் கடினமாக அமைந்தது. மேலும் அவர் பந்துகள் சற்றே வேகம் கூடுதலாக அமைந்ததால் பேட்ஸ்மென்கள் தூக்கி அடிக்க முடியவில்லை. இதனையடுத்து அவர் 4 ஓவர்களில் 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

ரஹானே, திவாரி, தோனி அபாரம்

மும்பையினால் பேட் செய்ய அழைக்கப்பட்ட புனே அணிக்கு வழக்கமான தொடக்கம் கிடைக்கவில்லை. ராகுல் திரிபாதி ரன் எடுக்காமல் பிளிக் ஆட முயன்று மெக்லெனகன் பந்தில் பவுல்டு ஆனார். மலிங்கா பந்தில் முன் விளிம்பில் பட ஹர்திக் பாண்டியா கேட்ச் பிடிக்க 1 ரன்னில் வெளியேறினார் ஸ்மித். அதன் பிறகு ரன் வருவது மிகவும் கடினமாக அமைந்தது. 10 பந்துகளில் 3 ரன்கள் என்று புனே அணி திணறியது. ஆனால் ரஹானே, திவாரி விக்கெட்டுகளை விடாமல் பொறுப்புடன் நிதானமாகவும் அதே வேளையில் பந்தை அடிக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் அடித்தும் ஆடினர். கரண் சர்மா, குருணால் பாண்டியாவை அடிப்பது மிகக் கடினமாக அமைந்தது.

ரஹானே திணறினாலும் 43 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 56 ரன்கள் எடுக்க, திவாரியும், ரஹானேயும் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 80 ரன்களைச் சேர்த்த போது ரஹானே கரண் சர்மாவிடம் எல்.பி. ஆகி வெளியேறினார். 12.4 ஓவர்களில் 89/3 என்று இருந்தது. அதன் பிறகு தோனி இறங்கினார். முதலில் ஒரு அபாரமான சிக்சரை அடித்தார், ஆனால் அதன் பிறகு ரன்கள் வரத்து குறைவாகவே இருந்தது. 18 ஓவர்கள் முடிவில் 121/3 என்று இருந்தது.

19-வது ஓவரில் மெக்லெனகன் பந்துகளை மனோஜ் திவாரி, தோனி பதம் பார்த்தனர், முதலில் பீமர் நோ-பால் பவுண்டரி ஆனது. இது திவாரியின் அரைசதமாகவும் அமைந்தது. பிறகு நேராக ஒரு சிக்சர். சிங்கிள் எடுத்து தோனியிடம் ஸ்ட்ரைக்கைக் கொடுக்க தோனி கிரீசிற்குள் நன்றாக உள்ளே நின்ற படி மிட்விக்கெட் மீது ஒரே தூக்கு தூக்கினார் பந்து சிக்ஸ். அதன் பிறகு 2 வைடுகள், பிறகு கடைசி பந்தில் தோனி மீண்டும் ஒரு சிக்சர் அடிக்க இந்த ஓவரில் 26 ரன்கள் விளாசல். 3 ஓவர்களில் 20 ரன்கள் என்றிருந்த மெக்லனகன் கடைசியில் 4 ஓவர்களில் 46 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
20-வது ஓவரில் பும்ரா வீச தோனி பும்ராவுக்கு எதிராக தன் முதல் சிக்சரை விளாசினார். மீண்டும் நேராக ஒரு சிக்ஸ். கடைசி பந்தில் திவாரி ரன் அவுட் ஆனார். கடைசி 2 ஓவர்களில் 41 ரன்கள் வர புனே அணி 162 ரன்கள் எடுத்தது. மனோஜ் திவாரி 48 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 58 ரன்களை எடுக்க, தோனி 26 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 40 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இந்தப் பிட்சில் அது தடுக்கக் கூடிய ஸ்கோர் அல்ல என்றாலும் புனே அணி அபார வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் லெண்டில் சிம்மன்ஸ் 5 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். பார்த்திவ் படேல் அற்புதமாக ஆடினார். முதலில் வாஷிங்டன் சுந்தரை மிட்விக்கெட்டில் சிக்ஸ் தூக்கினார். உனட்கட் வீசிய மார்புயர பவுன்சரை டீப் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸ் அடித்தார். பெர்குசனை லெக் திசையில் அடித்த சிக்ஸ் ஆடம் கில்கிறிஸ்டின் துல்லியத்தை நினைவூட்டியது. பார்த்திவ் படேல் 40 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 52 ரன்கள் எடுத்து 7-வது விக்கெட்டாக ஸ்கோர் 103 ஆக இருந்த போது வெளியேறினார். மெக்லெனகன், குருணால் பாண்டியாவை தாக்குர் வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா 1 பவுண்டரி 1 சிக்சருடன் 14 ரன்களில் வெளியேறினார். கடைசியில் பும்ரா 11 ரன்கள் எடுக்க மலிங்கா 7 ரன்கள் எடுக்க 20 ஒவர்களில் 142/9 என்று மும்பை முடிந்தது. ஆட்ட நாயகன் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், தாக்குர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்