முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவரக்கோட்டை கிராமத்தில் இரவு நேர விபத்துகளில் சிக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு:

வியாழக்கிழமை, 18 மே 2017      மதுரை
Image Unavailable

 திருமங்கலம்.-மதுரை மாவட்டம்,திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டை கிராமத்தின் வழியே சென்றிடும் நான்குவழிச் சாலை இரவு நேரங்களில் மின்விளக்கு வெளிச்சமின்றி இருளடைந்து கிடப்பதால் விபத்துகளில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதனால் சிவரக்கோட்டை கிராமத்து நான்கு வழிச்சாலையின் நடுவே தடுப்பு வேலிகள் அமைப்பதுடன் இருளை போக்கிட உயர்கோபுர மின்விளக்கு அமைத்திட வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம்,திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டை கிராமத்தின் நடுவே நான்கு வழிச்சாலை(என்.ஹெச்.7)செல்கிறது.சற்று வளைவாக அமைந்துள்ள இந்த சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவதுடன் உயிரிழப்புகளுக்கும் காரணமாகி விடுகிறது.மேலும் சிவரக்கோட்டை நான்கு வழிச்சாலையின் நடுவே போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் சிதைந்து சின்னா பின்னமாகி விட்டதாலும்,இரவு நேரங்களில் நான்கு வழிச்சாலை பகுதி முற்றிலுமாக இருளடைந்து காணப்படுவதாலும் இந்த பகுதி விபத்துக்களின் விளைநிலமாக மாறிவிட்டது.குறிப்பாக இரவு நேரங்களில் சிவரக்கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள நான்குவழிச்சாலை பகுதியை நடந்து மற்றும் டூவீலர்களில் கடந்து செல்லும் போது வாகனங்கள் மோதி உயிரிழப்போரது எண்ணிக்கை தற்போது கணிசமாக அதிகரித்து வருகிறது.இது வரையில் சிவரக்கோட்டை மாரியம்மன் கோவில் முன்பாக மட்டும் விபத்துகளில் சிக்கி 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர்.இது போன்ற விபத்துக்களை தடுத்திட தேவையான நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்ளாதது இப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் சிவரக்கோட்டை கிராமத்தின் நடுவே சென்றிடும் நான்கு வழிச்சாலையில் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுத்திடும் வகையில் நான்கு வழிச்சாலையின் நடுவில் மக்கள் ஊடுருவிச் சென்றிடாத வகையில் தடுப்பு வேலிகள் அமைத்திட வேண்டும்,இருளில் தடுமாறிச் சென்று விபத்தில் சிக்கிடாதபடி மாரியம்மன் கோவில் மற்றும் எஸ்.பி.நத்தம் ரயில்வே கேட் இணைப்பு சாலை பகுதியில் இருளை பகலாக்கிடும் உயர்கோபுர மின்விளக்கு அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.எனவே இந்த விஷயத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக கவனம் செலுத்தி சிவரக்கோட்டை பகுதியில் விபத்துகளையும் அதனால் ஏற்டும் உயிரிழப்புகளையும் தடுத்திட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்