வேலூர் மாவட்டத்தில் பாயிண்ட் ஆப் சேல் கருவியின் மூலம் விவசாயிகளுக்கு மான்ய விலையில் உரங்கள் விற்கப்படும்: வேளாண் இணை இயக்குனர் வாசுதேவரெட்டி தகவல்

வியாழக்கிழமை, 18 மே 2017      வேலூர்

 

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மைத் துறையின் சார்பில் வேளாண் இணை இயக்குநர் வாசுதேவரெட்டி முன்னிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 250-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்களுக்கு அரசு மான்யத்தில் வழங்கும் உரங்களின் விவரத்தினை பாயிண்ட் ஆப் சேல் கருவிகளில் பதிவு செய்யும் முறையின் செயல் விளக்கக்கூட்டம் நடைபெற்றது.

உரங்கள்


 

மத்திய அரசின் சார்பில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் மான்யத்துடன் வழங்கப்படுகிறது. இந்த உரங்கள் சில்லறை கடைகள், கூட்டுறவு கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உரங்கள் அதிக விலையில் விற்பணையாளர்கள் விற்பதை கட்டுப்படுத்தவும், பதுக்கலை தடுக்கவும் பாயிண்ட் ஆப் சேல் கருவி மூலம் உரங்களை விற்க மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 250 சில்லறை கடைகளும் 61 மொத்த விற்பனை கடைகளும் 181 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் உரங்கள் விவசாயிகளுக்கு மான்ய விலையில் விற்கப்படுகிறது. இவர்களுக்கு பாயிண்ட் ஆப் சேல் கருவி இலவசமாக வழங்கப்பட்டு அதன்மூலம் உரங்கள் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சில்லறை விற்பனையாளர்களுக்கு பாயிண்ட் ஆப் சேல் கருவியின் செயல்பாடுகள், கருவியினை கையாள்வது, விவசாயிகளின் ஆதார் எண்களை கருவியில் இணைப்பது குறித்து இந்த பயிற்சி கூட்டத்தில் விளக்கப்பட்டது. மேலும் வேலூர் மாவட்டத்தில் சுமார் 1 இலட்சத்து 68 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர். இவர்களுக்கு உரங்கள் தட்டுபாடின்றி கிடைக்கவும், அனைத்து இடங்களில் ஒரே சீராக விற்பனை செய்யவும், விற்பனையாளர்கள், கூட்டுறவு வங்கிகளுக்கு பாயிண்ட் ஆப் சேல் கருவிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. உரவிற்பனையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பாய்ண்ட் ஆப் சேல் கருவி வழங்கப்படுகிறது. உரம் இருப்பு, விற்பனை குறித்த விவரங்கள் இந்த கருவியில் பதிவாகும். இதனால் இருப்பு மற்றும் விற்பனையில் எவ்வித முறைகேடுகளையும் செய்ய இயலாது. இந்த கருவியில் இணைக்கப்பட்டுள்ள விவசாயிகளின் ஆதார் எண்களை கொண்டும், கை ரேகையினை கொண்டும் விவசாயிகள் எங்கு வேண்டுமானாலும் தேவைக்கேற்ப உரங்களை மான்ய விலையில் பெற்றுக்கொள்ளலாம். வருகிற மே 31 ஆம் தேதி வரை மட்டுமே கையால் எழுதப்பட்ட இரசீதுகள் வழங்கப்படும். அடுத்த மாதம் ஜுன் மாதம் 1 ஆம் தேதி முதல் பாயிண்ட் ஆப் சேல் கருவியின் மூலம் இரசீதுகள் வழங்கப்பப்படும் மேலும் அந்தந்த வட்டாரத்தில் உள்ள மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு உரங்கள் விற்பனை செய்யப்படும்.

இக்கூட்டத்தில் உதவி இயக்குநர் நெப்போலியன் (தரக்கட்டுப்பாடு), வேளாண் அலுவலர் முருகன், விற்பனை அலுவலர் ராஜேந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளங்கோ மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: