முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குல்புஷன் ஜாதவை தூக்கிலிட பாகிஸ்தானுக்கு தடை - 11 நீதிபதிகளும் ஏக மனதாக வழங்கிய பரபரப்பு தீர்ப்பு

வியாழக்கிழமை, 18 மே 2017      உலகம்
Image Unavailable

ஹக் : இந்திய முன்னாள் கப்பல்படை அதிகாரி குல்புஷன் யாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை நிறுத்திவைக்கும்படி பாகிஸ்தானுக்கு சர்வதேச கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய கப்பல் படையில் பணியாற்றிய முன்னாள் அதிகாரி குல்புஷன் ஜாதவ்,(46)  வியாபாரம் தொடர்பாக ஈரானுக்கு சென்றிருந்தார். அங்கு இவரை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-ம் தேதி பாகிஸ்தான் உளவு பிரிவினர் கடத்திக்கொண்டு பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டனர்.

ஜாதவ் மீது பொய் வழக்கு

அதோடு மட்டுமல்லாது ஜாதவ் மீது உளவு பார்த்ததாகவும் நாசவேலைக்கு சதி செய்ததாகவும் பாகிஸ்தான் தனது ராணுவ கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை சரியாக விசாரிக்காத பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு, ஜாதவுக்கு தூக்குத்தண்டனையை விதித்தது.

இந்தியா கடும் எதிர்ப்பு

ஜாதவுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் ஜாதவுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தது. ஜாதவ் விவகாரத்திற்கு தூதரக ரீதியாக தீர்வுகாண இந்தியா 30-க்கும் மேற்பட்ட முறை முயற்சி செய்தது. இதை பாகிஸ்தான் நிராகரித்துவிட்டது.

சர்வதேச கோர்ட்டில் வழக்கு

இதையடுத்து, ஜாதவுக்கு தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி நெதர்லாந்து நாட்டில் ஹக் நகரில் உள்ள சர்வதேச கோர்ட்டில் கடந்த 8-ம் தேதி இந்தியா வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணையின்போது இந்திய தரப்பில் பிரபல வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதாடினார். ஜாதவுக்கு தூக்குத்தண்டனையை பாகிஸ்தான் விதித்திருப்பது கடந்த 1977-ம் ஆண்டு வியன்னா மாநாட்டில் நடந்த ஒப்பந்தத்திற்கு எதிரானது என்றும் ஈரானுக்கு வியாபாரம் சம்பந்தமாக ஜாதவ் சென்றிருந்தார் என்றும் அவரை பாகிஸ்தான் உளவுப்பிரிவினர் கடத்திக்கொண்டு சென்றுவிட்டனர் என்றும் ஹரீஷ் வாதாடினார்.

30 முறை முயற்சி

தூதரக ரீதியாக பிரச்சினைக்கு தீர்வுகாண இந்தியா 30 முறை முயற்சி செய்தும் அதை பாகிஸ்தான் நிராகரித்துவிட்டது என்றும் தீர்ப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ஜாதவுக்கு பாகிஸ்தான் தூக்குத்தண்டனையை நிறைவேற்றிவிடும் என்றும் ஹரீஷ் கேட்டுக்கொண்டார். பாகிஸ்தான் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் ஜாதவ் கைது செய்யப்பட்டார் என்றும் அவர் நாசவேலை மற்றும் உளவு வேலையில் ஈடுபட்டதாகவும் உளவு பார்த்த விவகாரம் தூதரக ரீதியாக வராது என்றும் கூறினார்.

ஆனால் இந்தியா கேட்டுக்கொண்டபடி சர்வதேச கோர்ட்டு முதலில் ஜாதவுக்கு தூக்குத்தண்டனையை கடந்த 9-ம் தேதி சஸ்பெண்ட் செய்தது. பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் சர்வதேச கோர்ட்டு அறிவித்தது. அதன்படி நேற்று பிற்பகல் சர்வதேச நேரப்படி மாலை 3 மணி அளவில் சர்வதேச கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவு

அந்த தீர்ப்பில் ஜாதவுக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்கிய பெஞ்சில் 11 நீதிபதிகள் இருந்தனர். இந்த 11 நீதிபதிகளும் ஒரு மித்த கருத்துடன் தீர்ப்பு வழங்கியுள்ளனர். உண்மையிலேயே இது இந்தியா தரப்பில் நீதி உள்ளது என்பதை காட்டுகிறது.

ஜாதவ் விவகாரத்தில் இந்தியா தூதரக ரீதியாக தொடர்புகொண்டதை வியன்னா மாநாடு ஒப்பந்தப்படி பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். ஜாதவ் கைது விவகாரம் ஒரு பிரச்சினையாக இருக்கிறது என்றும் தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி ரோன்னி ஆப்ரஹாம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்