ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியின் மகளிருக்கான சிறப்புக் கடன் மேளா தொடக்கம்

வியாழக்கிழமை, 18 மே 2017      ஈரோடு

ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி சார்பில், மாத வருமானம் பெறும் மகளிருக்கான கடன் முகாமின் தொடக்க விழா நடைபெற்றது.

315 நபர்களுக்கு

இம்முகாமை  கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடக்கிவைத்தார். மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். அவர் பேசும்போது கூறியதாவது: ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி, தனியார் வங்கிகளுக்கு இணையாக முழுமையாக கணினிமயமாக்கப்பட்டு வேகமாக இயங்கி வருகிறது. மத்திய வங்கி மூலம் இதுவரை வீட்டு வசதிக் கடன் மேளா நடத்தப்பட்டு 315 நபர்களுக்கு கடந்த மார்ச் மாதம் வரையிலும் ரூ.279.32 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது.


ரூ.3 லட்சம் வரை

வீட்டு அடமானக் கடனாக 178 பேருக்கு ரூ.86.85 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. ஜெயமகளம் மாதாந்திரச் சிறப்புத் தொடர் வைப்புத் திட்டத்தில் இதுவரை 10,500 வைப்புதாரர்கள் இந்த வங்கியின் மூலம் சேமிப்புக் கணக்கைத் தொடங்கியுள்ளனர். நிலையான மாத வருமானம் பெறும் அரசு, அரசு சார்ந்த, பிரபல நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து மகளிரும் பயனடையும் வகையில், மாத வருமானம் பெறும் மகளிருக்காக சிறப்புக் கடன் மேளா தொடங்கப்பட்டுள்ளது. இக்கடன் பெற குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி யாற்றி இருக்க வேண்டும். வீட்டுப் பொருள்கள் வாங்கவும், மகளிரின் வாழ்வாதாரத்தைப் பெருக்கவும் எளியமுறையில் குறைந்த வட்டியில் அதிகபட்சமாக ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது என்றார்.

இதில், மாத வருமானம் பெறும் 2 மகளிருக்கு தலா ரூ.1.95 லட்சத்துக்கான காசோலை உள்பட ரூ.60 லட்சத்துக்கான கடனுதவிக் காசோலைகளை ஆட்சியர் பிரபாகர் வழங்கினார்.எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), வி.பி.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணராஜ், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் தெய்வநாயகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: