முதல்வர் பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      தமிழகம்
C M  Palanisamy Ooty 2017 05 19

ஊட்டி, தர்மம், அதர்மத்தை மையக் கருவாக வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு குட்டிக்கதை கூறினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று 121-வது உதகை மலர்க் கண்காட்சியை தொடங்கி வைத்தார். அப்போது முதல்வர் பழனிசாமி உரையாற்றும்போது ஒரு குட்டிக்கதை கூறினார்.  ''ஒரு பக்தன் காட்டிலே கடும் தவம் புரிந்தான். கையில் கதாயுதத்தோடு அவன் கண்முன்னே கடவுள் திடீரென்று தோன்றி, 'பக்தா! உனக்கு என்ன வேண்டும்? கேள்!' என்றார்.  'கடவுளே! என் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கின்ற எதிரிகளை உங்கள் கதாயுதத்தால் தாக்கி வீழ்த்தி அழிக்க வேண்டும்' என்று பக்தன் வேண்டினான்.

கடவுளும் அவ்வாறே வரம் கொடுத்தார்.


சற்று நேரம் கழித்து கதாயுதம் மட்டும் காற்றில் பறந்து வந்து வரம் கேட்ட பக்தனின் மார்பைத் தாக்கியது.
அதிர்ச்சியடைந்த பக்தன், குறிதவறி வந்து வரம் கேட்ட என்னையே இந்த கதாயுதம் தாக்குகிறதோ என்ற அச்சத்தில் திரும்பவும் தவம் மேற்கொண்டான்.

இறைவன் காட்சியளித்தார்.

'பக்தனே! நீ கேட்டபடிதான் நான் கதாயுதத்தை வீசினேன். மற்றவர்களை அழித்து நீ முன்னேற நினைக்கும் உன் மனம்தான் உனக்குப்பகை என்பதால்தான் என் கதாயுதம் உன் எண்ணத்தை அழிக்க முற்பட்டது.  இப்போது உன் தீய எண்ணத்தை விட்டொழித்தாயா?' என்று கேட்டது.

தர்மத்தைப் பற்றிய பேசுகிறவர்கள் அதர்மத்தைச் செய்தால், மக்கள் கதாயுதம் வடிவத்தில் வந்து பாடம் கற்பிப்பார்கள். நன்றியோடு நடந்துகொள்வதே ஒரு தர்மம்தான்.. இந்த அரசு ஜெயலலிதா வழியில் செயல்படும் அரசு. ஜெயலலிதா எண்ணங்களை நிறைவேற்றும் அரசு. மக்கள் நலத்திட்டங்களை ஜெயலலிதாவின் வழியில்செயல்படுத்தி வரும் அரசு. மக்களின் நலனுக்காகவே செயல்படும் அரசு. இது உங்கள் அரசு. உங்கள் நலன் காக்கும் அரசு.  'மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள். நான் மக்கள் பக்கம் இருக்கிறேன்' என்ற ஜெயலலிதாவின் பொன்மொழிக்கேற்ப இந்த அரசு மக்களின் சேவகனாகப் பணியாற்றும்'' என்றார் முதல்வர் பழனிசாமி.

இதை ஷேர் செய்திடுங்கள்: