முளைப்பாரி நேர்த்திகடன் செலுத்தும் காளியம்மன் திருக்கோவில்

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      ஆன்மிகம்
kalikambal

Source: provided

மதுரை -திருமங்கலம் நகர் முனிசிபல் காலனியில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் திருக்கோவிலின் 36வது ஆண்டு வைகாசி பொங்கல் விழாவினை முன்னிட்டு நாடு வளம் பெற வேண்டி பக்தர்கள் பல்வேறு விநோத வடிவங்களில் முளைப்பாரி சுமந்து சென்றது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

திருமங்கலம் நகர் முனிசிபல் காலனியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் திருக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி பொங்கல் விழா வெகுவிமரிசையாக 3நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான 36வது ஆண்டு பொங்கல் விழாவின் முதல்நாளில் ஆதிபராசக்தி மகளிர் மன்றம் சார்பில் திருவிளக்கு பூஜை.


இரண்டாம் நாள் காலையில் ஸ்ரீகாளியம்மனுக்கு குண்டாறிலிருந்து பால்குடம்,தீர்த்தக்குடம், சந்தனகுடம் எடுத்து வந்து பாலாபிஷேகம், மஹாஅபிஷேகம், தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதையடுத்து மாலையில் குண்டாற்றிலிருந்து அம்மன் கரகம் எடுத்து வந்து பொங்கலிடுதல் மற்றும் மாவிளக்கு எடுத்தல் நிகழச்சிகள் நடைபெற்றது.

3ம் நாளான நேற்று காலை பத்ரகாளி மாரியம்மன் கோவிலிலிருந்து தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நகர் வலம் சென்று கோவிலுக்கு வந்தனர்.மாலையில் கோவிலில் வைத்து பக்தர்கள் விரதமிருந்து வளர்த்த முளைப்பாரிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் கருப்பசாமி, கள்ளழகர், சிவலிங்கம். காவடி, நந்தி உள்ளிட்ட பல்வேறு விநோத வடிவங்களில் அமைக்கப்பட்டிருந்த கரகம், முளைப்பாரியை தலையில் சுமந்தபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்ற பக்தர்கள் நாடு வளம் பெற்று திகழந்திட வேண்டி சிறப்பு பூஜை செய்து குண்டாற்றில் விட்டனர்.

இந்த விழாவில் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ரூபாய் நோட்டு அலங்காரத்துடன் காட்சியளித்த ஸ்ரீகாளியம்மனை வழிபட்டு சென்றனர்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை திருமங்கலம் முனிசிபல் காலனி ஸ்ரீகாளியம்மன் கோவில் நிர்வாக குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: