சென்னையில் 105 டிகிரி வெயில்: வெப்பம் படிப்படியாக குறையும்

சென்னை, சென்னையில் இன்று வெயில் அளவு 102 டிகிரியில் இருந்து 105.8 டிகிரி வரை இருந்தது. அனல் காற்று இனி படிப்படியாக குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் தாக்குவதோடு அனல் காற்றும் வீசி வருகிறது. வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெப்பம் தாக்குகிறது. சாலைகளில் நடமாட முடியவில்லை. இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னையில் நேற்று முன் தீனம் வரலாறு காணாத வகையில் 110 டிகிரி வெப்பம் பதிவாகி இருந்தது. பொது மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர். இதனால் பகலில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. வெயிலின் உக்கிரம் அதிகமான போதிலும் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. என்றாலும் வெப்ப காற்று வீசியது. இன்று வெயில் அளவு 102 டிகிரியில் இருந்து 105.8 டிகிரி வரை இருந்தது. அனல் காற்று இனி படிப்படியாக குறையும் என்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்யும். வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனல் காற்று வீசும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.