ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது: ஸ்டே‌ஷன் மாஸ்டர்- என்ஜின் டிரைவர் சஸ்பெண்டு

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      தமிழகம்
Train 2017 10 01

சென்னை, ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது தொடர்பாக ஸ்டே‌ஷன் மாஸ்டர், என்ஜின் டிரைவர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

கடந்த 15-ந்தேதி இரவு சென்னையில் இருந்து ஈரோடு புறப்பட்டுச் சென்ற ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டு இருந்தது. அரக்கோணத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் புளியமங்கலம் ரெயில் நிலையத்தை தாண்டியதும் மெதுவாகச் சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக ரெயில் என்ஜினும், 3 பெட்டிகளும் தடம் புரண்டது. ரெயில் மெதுவாகச் சென்றதால் கவிழாமல் தண்டவாளத்தை விட்டு விலகி ஓடி நின்றுவிட்டது. இதில் பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படாமல் தப்பினார்கள். ரெயில் வேகமாக சென்ற போது தடம் புரண்டால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும். விபத்து குறித்து விசாரணை நடத்த தென்னக ரெயில்வே உத்தரவிட்டது. சென்னையில் இருந்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

ஆரம்ப கட்ட விசாரணையில் சிவப்பு சிக்னல் எரிந்து கொண்டிருந்த நிலையில் என்ஜின் டிரைவர் அதை மீறிச் சென்று இருக்கிறார். அங்கிருந்த ரெயில் நிலைய அதிகாரியும் வாய் மொழியாக ரெயில் செல்ல அனுமதி அளித்து இருப்பதும் தெரியவந்தது. இதுபற்றி ரெயில் நிலைய அதிகாரியிடம் விசாரித்த போது அவர் சிக்னல் செயல் இழந்ததால் வாய்மொழியாக அனுமதித்ததாக தெரிவித்தார். வாய் மொழியாக அனுமதி வழங்கும் அதிகாரம் ரெயில் நிலைய அதிகாரிக்கு இல்லை என்பதால் ரெயில் நிலைய அதிகாரி மற்றும் என்ஜின் டிரைவர் ஆகியோரை சஸ்பெண்டு செய்து தென்னக ரெயில்வே உத்தரவிட்டுள்ளது. சிக்னல் மற்றும் தகவல் தொடர்பு கோளாறு பற்றி தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


இதை ஷேர் செய்திடுங்கள்: