தி.மலை தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று தொடங்கியது: 528 மனுக்கள் பெறப்பட்டன

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      திருவண்ணாமலை
photo04

திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரும் ஜமாபந்தி அலுவலருமான ப.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று தொடங்கியது வருவாய், தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி வருகிற 29ந் தேதி வரை நடைபெறவுள்ளது. ஜமாபந்தியில் வருவாய் நிர்வாக கணக்குகள் தணிக்கை, பட்டா மாறுதல், வருவாய்த்துறை தொடர்பான புகார்கள் குறைகளுக்கு தீர்வு காணப்படும்.

ஜமாபந்தி

முதல் நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) நாயுடுமங்கலம் உள்வட்டத்துக்குட்பட்ட மேப்பத்துறை, கீழாத்தூர், நார்த்தாம்பூண்டி நெல்லிமேடு, சி.ஆண்டாப்பட்டு, பெரியகிளாம்பாடி, சிறுகிளாம்பாடி, முத்தரசம்பூண்டி, கார்கோணம், கோவூர், கமலப்புத்தூர், வடபுழுதியூர், மருத்துவாம்பாடி, அகரம் சிப்பந்தி, நாயுடுமங்கலம், பொற்குணம், வெளுகனந்தல், சாலையனூர், ம.ந.பாளையம், தேவனாம்பட்டு, ஊதிரம்பூண்டி, காட்டுபுத்தூர் ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது.


இந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் தாசில்தார் ஆர்.ரவி, சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார் டி.ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்க, துரிஞ்சாபுரம் மண்டல துணை தாசில்தார் அமுல் அனைவரையும் வரவேற்றார். ஜமாபந்திக்கு தலைமையேற்று மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரும் ஜமாபந்தி அலுவலருமான ப.சுப்பிரமணியன் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் மனுக்களை பெற்றார். முதல் நாளான நேற்று நடைபெற்ற இந்த ஜமாபந்தியில் மொத்தம் 528 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக 21 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் தலைமை நில அளவர் ஆர்.வரதராஜன், வேளாண் உதவி இயக்குநர் சி.அரக்குமார், வேளாண் அலுவலர் கே.சந்திரன், தலைமையிடத்து துணை தாசில்தார் ஆர்.செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் கே.மணிகண்டன், கிராம நிர்வாக அலுவலர்கள் மதியழகன், வெங்கடாஜலம், மணிகண்டன், சங்கீதா, உத்திரகுமார், சீனிவாசன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் தேன்மொழி நன்றி கூறினார்.2ம் நாளான வரும் திங்கட்கிழமை 22ந் தேதி திருவண்ணாமலை வடக்கு உள்வட்டத்துக்கான கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறவுள்ளது.

 

 

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: