நீர்வரத்தால் கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      தேனி
theni 1

தேனி - பெரியகுளம் அருகே கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ளது கும்பக்கரை அருவி. கோடை விடுமுறையை முன்னிட்டு அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கடந்த மாதம் அருவிக்கு நீர்வரத்து இல்லாததால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் அருவிக்கு நீர்வரத்து வந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு தேங்கிய  தண்ணீரில் குளித்த சென்னையை சேர்ந்த காவலரும், அவருடைய மகனும் ஆழமான பகுதியில் சிக்கி உயிரிழந்தனர். இதனால் ஆழமான பகுதியை மூடும் பணி நடைபெற்றதால் கடந்த சில நாட்களாக அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அப்பணிகள் முடிவடைந்ததாலும், அருவிக்கு நீர்வரத்து அதிகரித்ததாலும் சுற்றுலா பயணிகளுக்கு  அருவியில் குளிக்க நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் அருவிப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு வனப் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் தெரிவிக்கும் போது அருவியில் குளித்தது மகிழ்ச்சியாக இருந்தாலும், அனுமதி கட்டணம் அதிகம் என்றும் அதை குறைக்க வேண்டுமென்றும் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: