முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை சென்ட்ரலில் பூமிக்கு அடியில் பிரமாண்ட மெட்ரோ ரெயில் நிலையம்

சனிக்கிழமை, 20 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, சென்டிரலில் பூமிக்கு அடியில் சுரங்கபாதைகள் இணைக்கப்பட்டு பிரமாண்ட மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கப்படுகிறது.

சென்னையில் துரிதமான போக்கு வரத்துக்காக வண்ணாரப்பேட்டை, சென்டிரல், அண்ணாசாலை, சைதாப்பேட்டை மார்க்கத்தில் விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் பாதையும் சென்டிரலில் இருந்து எழும்பூர், நேரு பூங்கா, திருமங்கலம், கோயம்பேடு வழியாக விமான நிலையத்துக்கு மற்றொரு ரெயில் பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது. சுரங்கம் வழியாகவும், உயர்மட்ட பாதையிலும் ரெயில்கள் விடப்படுகிறது. இதில் பணி முடிவடைந்த பாதையில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயில் பாதையில் சென்டிரல் முக்கிய ஜங்‌ஷனாக விளங்குகிறது. வண்ணாரப்பேட்டையில் இருந்து வரும் சுரங்க ரெயில் பாதையும், நேரு பூங்கா, எழும்பூரில் இருந்து வரும் சுரங்கபாதையும் சென்டிரலில் இணைகிறது. இதேபோல் சைதாப்பேட்டை, அண்ணாசாலையில் இருந்து வரும் சுரங்கப்பாதையும் சென்டிரலில் இணைகிறது. இதற்காக சென்டிரலில் பூமிக்கு அடியில் பிரமாண்டமான மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கப்படுகிறது.

இந்த ரெயில் நிலையத்துடன் 3 மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதைகளும் இணைக்கப்படுகிறது. ஓரிடத்தில் இருந்து வரும் பயணிகள் இங்கு இறங்கிக் கொண்டு தங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்லும் மெட்ரோ ரெயிலில் ஏறிக் கொள்ளலாம். சென்டிரலில் பூமிக்கு அடியில் அமைக்கப்படும் மெட்ரோ ரெயில் நிலையத்துடன் பூங்காநகர்- சென்டிரல் புறநகர் ரெயில் நிலையத்தை இணைக்கும் சுரங்கப்பாதையும் இணைக்கப்படுகிறது. இது மின்சார ரெயில் பயணிகள், மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய வசதியாக இருக்கும் வகையில் இணைக்கப்படுகிறது. பூங்கா நகர் ரெயில் நிலையத்தில் இருந்து புறநகர் ரெயில் நிலையம் செல்லும் 50 மீட்டர் சுரங்கப்பாதை பணி முடிவடைந்து விட்டது.

இந்த சுரங்கப்பாதையால் நேற்று பல்வேறு ஒத்திகைகள் நடத்தப்பட்டது. சுரங்கப்பாதை வழியாக நடந்து செல்லும் பயணிகள் அச்சமின்றி பாதுகாப்புடன் செல்ல தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. போதுமான வெளிச்சம் தரும் வகையில் விளக்கு வசதி, குளிர் சாதன வசதி, வெளிக் காற்று வசதி போன்றவை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சுரங்கப்பாதை திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பணிக்காக பூங்கா ரெயில் நிலையம் அருகே ஏற்கனவே இருந்தபழைய சுங்கப்பாதை மூடப்பட்டது. தற்காலிகமாக அங்கு இரும்பு நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. புதிய சுரங்கப்பாதை 9 மீ. அகலத்தில் 50 மீட்டர் நீளத்துக்கு பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது. ஒத்திகை முடிந்ததும் பயணிகள் உபயோகத்துக்கு திறக்கப்படும். இது தொடர்பாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது- சென்டிரலில் பிரமாண்டமான மெட்ரோ ரெயில் நிலையம் பூமிக்கு அடியில் ரூ.400 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரெயில் பணிக்காக ஏற்கனவே இங்கு இருந்த சுரங்கப்பாதை அகற்றப்பட்டது. தற்போது புதிய சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு ஒத்திகை நடை பெற்று வருகிறது. இது முடிந்ததும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். சென்டிரல் ரெயில் நிலையம் எதிரே பூந்தமல்லி நெடுஞ்சாலையின் கீழ் 70 ஆயிரத்து 60 சதுர அடி பரப்பளவில் சுரங்க மெட்ரோ ரெயில் நிலையம் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இது இரு தளங்கள் கொண்டதாக இருக்கும். சுரங்கம் வழியாக கோயம்பேடு, எழும்பூரில் இருந்து வரும் மெட்ரோ ரெயில் முதல் தளத்திலும், வண்ணாரப்பேட்டையில் இருந்து வரும் மெட்ரோ ரெயில் 2-வது தளத்திலும் வந்து இணைந்து அண்ணா சாலை வழியாக பரங்கிமலை செல்லும் இந்தப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சுரங்க ரெயில் நிலையத்தின் மேலே உள்ள சாலையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வழக்கம் போல் பஸ் போக்குவரத்து நடைபெறும். இந்தப் பணிகள் முடிவடைந்தால் வெளிநாடுகளில் உள்ளது போல் சென்டிரல் மிக பிரமாண்டமான போக்கு வரத்து ஜங்‌ஷனாக திகழும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்