முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் பெண்களுக்காக பெண்களே நடத்தும் டிவி சேனல்

சனிக்கிழமை, 20 மே 2017      உலகம்
Image Unavailable

கபூல் : ஆப்கானிஸ்தானில் பெண்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதற்கு பெண்களே நடத்தும் தொலைக்காட்சி டிவி சேனல் ஒன்று துவங்கப்பட்டுள்ளது.  சான் டிவி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொலைக்காட்சி சேனல் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கன் தலைநகர் காபூலில் துவங்கப்பட்டுள்ளது.

இந்தச் சேனலில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பேசப் போகிறது. சேனலின் சிறப்பம்சம் என்னவென்றால் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களாகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளர்களாவும் பெண்களே இருக்கிறார்கள்.

ஆப்கன் போன்ற ஆண்கள் அடக்குமுறை அதிகமுள்ள நாட்டில் இத்தகைய சேனல் துவங்கப்பட்டுள்ளது அந்நாட்டில் புதுமையானதாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த டிவி சேனல் சமூக வலைத்தளத்தில் பிரபலமடைந்துள்ளது.

இதுகுறித்து சான் டிவி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவுள்ள கதிரா அகமதி (20) கூறும்போது, "பெண்களுக்காக தொலைக்காட்சி சேனல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. ஏனெனில் தங்களது உரிமைகளைப் பற்றி அறியாத பெண்கள் பலர் உள்ளனர். அத்தகைய பெண்களுக்காக நாங்களும் இந்தச் செய்தி சேனலும் செயல்பட இருக்கிறது. இதன் மூலம் அப்பெண்களின் குரலை உயர்த்த முடியும்" என்றார்.

சான் டிவி காபூலை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. பெண்கள் பிரச்சனைகளுடன், ஆரோக்கியம் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் ஒளிப்பரப்பு செய்யப்படுகின்றன.

சான் ட்வி நிறுவனர் ஹமித் சமார் கூறும்போது, "காபூல் போன்ற நகரங்களில் பெண்கள் பிரச்சனைகளை விவாதிக்கும் நிகழ்ச்சிகளை காண்பதற்கு பெண்கள் பலர் ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்த டிவி சேனலில் பணிபுரியும் பெண்களில் பெரும்பாலானவர்கள் மாணவிகள். இவர்களைத் தவிர்த்து வீடியோ, ஆடியோ, கிராபிக்ஸ் போன்ற தகவல் தொழிநுட்பம் சார்ந்த பணிகளில் ஆண்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு பணிபுரியும் பெண்கள் பலருக்கு ஊடகத் துறையில் இருப்பதால் மிரட்டல்கள் பல வருகின்றன. சில பெண்களை ஏற்றுக் கொள்ளாத குடும்பங்களும் உள்ளன" என்றார்.

பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல் அதிகம் உள்ள ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பெண்களின் உரிமைகளைப் பற்றி பேசும் டிவி சேனல் உருவாக்கப்பட்டுள்ளதற்கு சமூக ஆர்வலர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்