முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருநெல்வேலியில் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளுக்கான நேரடி உர மானியத்திட்ட செயலாக்க பயிற்சி கலெக்டர் மு.கருணாகரன் தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      திருநெல்வேலி

திருநெல்வேலி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஸ்பிக் மற்றும் வேளாண்மைத்துறையின் சார்பில் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளுக்கான நேரடி உர மானியத்திட்ட செயலாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சியை கலெக்டர்  துவக்கி வைத்து பேசியதாவது:

 உர மானியம்

உழவர்களுக்கு வழங்கப்படும் உரமானியம் நேரடியாக சென்று சேர்ந்திட இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி 01.06.2017 முதல் இந்தியா முழுவதும் உரங்களுக்கான நேரடி அரசு மானியத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். உரம் விற்பனையாளர்களில் விவசாயிகளுக்கு நேரடியாக உரங்களை விநியோகம் செய்யும் சில்லரை உர விற்பனையாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் இருந்து பெறப்படும் உரங்களுக்கு மட்டும் மானியம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

பணமில்லா பரிவர்த்தனை கருவி

1.6.2017 முதல் உர விற்பனை செய்பவர்கள் ஆதார் அடையாள அட்டை வேளாண்மைத்துறையின் மூலம் வழங்கப்பட்ட அடையாள எண் மற்றும் பணமில்லா பரிவர்த்தனை கருவி  வைத்திருப்போர் மட்டும் உர விற்பனை செய்ய முடியும். வேளாண்மைத்துறை மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 369 உர விற்பனையாளர்களில் 347 தனியார் உர விற்பனையாளர்களுக்கும், 163 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 149 வங்கிகளுக்கும் பணமில்லா பரிவர்த்தனை கருவி வழங்கப்பட்டு 1.6.2017 முதல் நடைமுறைப்படுத்தபட உள்ளது.

அரசு நிர்ணயித்த விலையில்

இத்திட்டத்தின் மூலம் ஆதார் அடையாள அட்டைகள் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமே மானியத்தில் உரம் வாங்க முடியும். நமது மாவட்டத்தில் 99 சதவீத நபர்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களை பரிசோதித்து வழங்கப்பட்டுள்ள மண்வள அட்டை அல்லது கிராம மண்வள குறியீட்டு அளவின்படியே உரங்களை பெற்றுக்கொள்ள முடியும். பயிருக்குத் தேவையான உரங்களை மட்டுமே மானியத்தில் அரசு நிர்ணயித்த விலைக்கே உரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

பயன்படுத்த வேண்டும்

விவசாயம் தவிர மற்ற பயன்பாட்டிற்கு உரங்களை பெற்றுக்கொள்ள இயலாது. எனவே அனைத்து  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர்கள் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும். அரசு மானியத்தின் பலன் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும் இந்த நல்ல திட்டத்தினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பேசினார்.இம்முகாமில் உரவிற்பனையாளர்களுக்கு பணமில்லா பரிவர்த்தனை கருவிகளை கலெக்டர்  வழங்கினார்.

பலர் பங்கேற்பு

முகாமில் கூட்டுறவு சங்கங்களில் இணை பதிவாளர் இரா.ராஜேந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் கனகராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தி ராணி, ஸ்பிக் நிறுவன மேலாளர் டி.சந்திரசேகரன், விற்பனை அலுவலர் பாலமுருகன், வேளாண்மை உதவி இயக்குநர் (உரம்) சங்கர் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலர்கள், உர விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்