முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் 2,16,000/- கால்நடைகள் பயன்பெற உள்ளன அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி, பாரியூர் ஊராட்சி, வெள்ளாளபாளையம் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் டிசம்பர் 2017 வரை நடைபெறவுள்ள சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாமினை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   தலைமையில்  பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  தொடங்கி வைத்தார்.

கால்நடை பாதுகாப்பு துறை

மறைந்த முன்னாள் முதலமைச்சர்  அம்மா  கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு வகையான திட்டங்களை மக்களுக்கு வழங்கி செயல்படுத்தியுள்ளார்கள்.  அம்மா அவர்களின் நல்லாசியுடன்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் மே-2017 முதல் டிசம்பர் 2017 வரை சிறப்பாக நடைபெற உள்ளது. வெள்ளாளபாளையம் பகுதியில் மட்டும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் டிசம்பர் 2017 வரை நடைபெறவுள்ள 216 சிறப்பு முகாம்களின் மூலம் சுமார் 2,16,000 கால்நடைகள் பயன்பெறவுள்ளன. இம்முகாம்களில் பங்குபெற உள்ள கால்நடைகளுக்கு பொது உடல்நல சிகிச்சை, தடுப்பூசிகள், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், சினை தரிக்காத கால்நடைகளுக்கென சிறப்பு சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட உள்ளது. கோழிகளுக்கு கோழி காய்ச்சல் நோய் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. 216 முகாம்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 216 கிராமப்பகுதிகளில் நடைபெறவுள்ளது. இம்முகாம்களுக்கு என ரூ.9,07,200/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது.

நலத்திட்ட உதவிகள்

எனவே கால்நடை பராமரிப்பு துறை மட்டுமின்றி ஒவ்வொரு துறைகளும் சிறப்பான முறையில் வளர்ச்சியடைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் மூலம் அறிவிக்கப்படும் எந்தவொரு திட்டமாக இருந்தாலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் விரைந்து வழங்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் குழந்தைகள் நல்லவொரு கல்யாளர்களாக வரவேண்டும் என்ற நோக்கத்தோடு பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு வகையான மாற்றங்களை மறைந்த முன்னாள் முதலமைச்சர் அவர்களின் நல்லாசியுடன்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் செயல்பட்டு வரும் பள்ளிக்கல்வி துறை செய்து வருகிறது. 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் நாட்கள் மற்றும் தேர்வு முடிவு வெளிவரும் நாட்கள் என இரண்டு தேதிகளையும் தெரிவித்து அதே நாட்களில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு சிறப்பான முறையில் பள்ளிக்கல்வி துறை செயல்பட்டு வருகிறது. சுமார் 20 இலட்சம் மாணவர்களுக்கு இரண்டு நிமிடங்களில் குறுஞ்செய்தியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் 1,21,00,000 மாணவர்களின் பாதுகாப்பையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு சிறந்த கல்வியாளர்களாக உருவாக்கும் வகையில் பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்த உள்ளது. 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்று நேரடியாக 12-ம் வகுப்பு செல்லும் முறையை மாற்றி 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரண பணிகள்

மாணவ, மாணவியர்களுக்கு எந்தவொரு இடர்பாடுகள் வந்தாலும் 24 மணிநேரத்தில் மாவட்ட கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் உடனடியாக அதற்கான நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விரைவில் கல்வித்துறையின் சார்பில் ஆணை வழங்கப்படவுள்ளது. மாணவ, மாணவியர்களுக்கான சீருடைகள் அடுத்த கல்வியாண்டில் தனியார் பள்ளிகளுக்கு இணையான சீருடைகள் வழங்கப்படவுள்ளது. 1 முதல்  5-ம் வகுப்பு வரையிலும், 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு 3 வகையான வண்ண சீருடைகள் வழங்கப்படவுள்ளது.

ஸ்மார்ட் கார்ட்டில்

அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் முறையையும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட் கார்டில் மாணவர்களின் புகைப்படம், பெயர், தாய் தந்தையர் பெயர், பிறந்த தேதி, முகவரி, கைபேசி மற்றும் தொலைபேசி எண்கள், இரத்த வகைப்பாடு, குடும்ப அட்டை எண், ஆதார் அட்டை எண் இவை அனைத்தும் பதியப்பட்டு வழங்கப்படும். மாணவ, மாணவியர்களுக்கு பொதுத்தேர்வு எழுத பயிற்சி அளிப்பதற்கென சிறந்த பயிற்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறவுள்ளது. 32 மாவட்ட தலைநகரங்களில் இந்திய ஆட்சிப்பணிக்கென பயிற்சி வகுப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளது. இவ்வகுப்புகளுக்கு ரூ.2.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களில் உள்ள நூலகங்களில் இந்திய ஆட்சிப்பணிக்கென படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு ஏற்றார்போல் புத்தகங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறப்பான பயிற்சிகள்

12 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு மாலை நேரங்களில் கூடுதலாக வாரத்திற்கு 3 நாட்கள் கூடுதல் வகுப்புகள் உருவாக்க உள்ளோம். விருப்பமுள்ள மாணவர்கள் இவ்வகுப்புகளில் கலந்து கொண்டு சிறப்பான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் மத்திய அரசு ஏற்படுத்துகின்ற எந்தவொரு தேர்வாக  இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் மாணவ, மாணவியர்கள் திறன்பட உள்ளனர் என்ற நிலையை உருவாக்கும் வகையில் இந்த திட்டங்கள் செய்யப்படவுள்ளது. வரும் காலங்களில் இன்று நடைமுறையில் உள்ள பாடத்திட்டங்களை மாற்றி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்களை மாற்ற  தமிழ்நாடு முதலமைச்சர் , அமைச்சர் பெருமக்கள் மற்றும் உயர்மட்ட குழு என அனைவரும் இணைந்து இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி மாணவ, மாணவியர்கள் எந்தவொரு தேர்வாக இருந்தாலும் சந்திக்கும் வல்லமை படைத்தவர்களாக இருக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வெளிப்படைத் தன்மையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர்  அம்மா அவர்களின் நல்லாசியுடன் நடைபெறும் இந்த அரசு சிறப்பான எதிர்காலத்தை மாணவர்களுக்கு வழங்கும் என தெரிவித்தார்.

மேலும் இச்சிறப்பு முகாமில் நடைபெற்ற கிடாரி கன்று பேரணியில் தேர்வு செய்யப்பட்ட 4 சிறப்பு கிடாரி கன்றுகளுக்கு  பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  ஊக்கப்பரிசுகள் வழங்கினார்.
 இச்சிறப்பு முகாமில் சட்டமன்ற உறுப்பினர்கள் இ.எம்.ஆர்.ராஜா (எ) கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்), சு.ஈஸ்வரன் (பவானிசாகர்), மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஸ், மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு துறை) ஆர்.ரவிச்சந்திரன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்