Idhayam Matrimony

பி.எஸ்.என்.எல்.முறைகேடு வழக்கு : மாறன் சகோதரர்கள் ஆஜராக சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவு

திங்கட்கிழமை, 22 மே 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : எஸ்.என்.எல் அதிவேக தொலைபேசி இணைப்புகளை சன் தொலைக்காட்சிக்கு முறைகேடாக வழங்கியது தொடர்பான வழக்கில், தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஜூன்  6-ம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்திலும் மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் அவர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தொலைபேசி இணைப்புகளை வழங்கியதாக புகார்

கடந்த 2004 மற்றும் 2007-ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அடையாறில் உள்ள தனது வீட்டிலிருந்து, சன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு 350 அதிவேக பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை வழங்கியதாக புகார் எழுந்தது. இதன் மூலம் அரசுக்கு சுமார் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதால், அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

6-ம் தேதிக்கு  ஒத்திவைப்பு

இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாறன் சகோதரர்கள் ஆஜராகவில்லை. சன் தொலைக்காட்சி ஊழியர்களான கண்ணன், ரவி மற்றும் பி.எஸ்.என்.எல். அதிகாரி பிரம்மநாதன்,ஓய்வு பெற்ற அதிகாரி வேலுசாமி உள்ளிட்டோர் ஆஜரானார்கள். அவர்கள் அனைவருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளிகளான மாறன் சகோதரர்கள் ஆஜராகாததால் இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை அடுத்த மாதம் 6-ம் தேதிக்கு நீதிபதி  நடராஜன் ஒத்திவைத்தார்.

நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

அன்றைய தினம் மாறன் சகோதரர்கள் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும், அப்போது குற்றப்பத்திரிகை நகல் அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார். இந்த நிலையில், ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில் மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. தொடர்ந்த மேல்முறையீட்டு மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாறன் சகோதரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பாக மலேசிய தொழிலதிபரை இந்தியாவுக்கு அழைத்து வந்த விசாரணை செய்யவேண்டியிருப்பதால், தாங்கள் இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருப்பதாக சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்