ரஜினிகாந்த் பிரதமரை சந்திப்பதை வரவேற்கிறேன்: மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு

திங்கட்கிழமை, 22 மே 2017      அரசியல்
VENKAIAH NAIDU 2017 05 22

பெங்களூரு, நடிகர் ரஜினிகாந்த் பிரதமரை சந்திப்பதை தாம் வரவேற்பதாக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார். சிறந்த நடிகர் ரஜினியும் சிறந்த பிரதமர் மோடியும் சந்திப்பதில் மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டதே  பரபரப்பாகிவிட்டது. தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்த அவர், கடைசி நாள் பேசிய அரசியல் உரை, அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோடி-ரஜினி சந்திப்பு

இதனையடுத்து, ரஜினிகாந்த்திற்காக பாஜகவின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என அதன் தேசிய தலைவர் அமித் ஷா  அறிவித்தார். இதனிடையே, ரஜினிகாந்த் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கப் போகிறார் என்று செய்தி வெளியானது. இதுகுறித்து பெங்களூருவில் மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடுவிடம், குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

சிறந்த நடிகர் ரஜினி

இதற்கு, இந்த சந்திப்பு குறித்து தமக்குத் தெரியாது என வெங்கய்ய நாயுடு பதிலளித்தார். இருப்பினும் ரஜினி மோடியை சந்தித்தால் அதை வரவேற்பதாக கூறிய அவர், ரஜினி சிறந்த நடிகர் என்றும், மோடி சிறந்த தலைவர் என்றும் கூறினார். இருவரும் சந்திக்க விரும்பினால் அதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் வெங்கய்ய நாயுடு கூறினார்

ரஜினியின் பலம்

அதே போன்று, தமிழக பாஜக தலைவர் தமிழிசை கோவையில் செய்தியாளர்களிடம் பேசும் போது, நடிகர் ரஜினிகாந்த் பாஜகவிற்கு வந்தால் கட்சிக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்று கூறினார். பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா முதல், அமைச்சர் வெங்கய்ய நாயுடு, பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை வரை ரஜினிகாந்த்தின் ‘பாஜக ஆதரவு' அறிவிப்பிற்காக காதை திறந்து வைத்து காத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: