முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழிலாளர்கள் நல செஸ் முறையை மத்திய அரசு கைவிடக் கூடாது - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 22 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தொழிலாளர் நல செஸ் முறையை நீக்க மத்திய அரசு முயற்சி செய்வதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பாதவது,

“அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்டம் செயல்படுவதற்கு நல செஸ் (Welfare Cess) பெறுவது பயனளிக்கிறது. இதன் மூலம் உப்பளம், சினிமா, நிலக்கரி, டோலமைட், சுண்ணாம்புக்கல், கட்டுமானம் போன்ற பல தொழில்களில் மத்திய அரசின் செஸ் பெறப்பட்டு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இன்று  உண்ணாவிரதம்

தமிழ்நாடு மற்றும் கேரள அரசு, நல வாரியங்களுக்கான நல லெவி வசூல் செய்கின்றனர்.ஆனால் மத்திய அரசு தொழிலாளர் நல செஸ் முறையை நீக்க முயற்சி செய்வதை எதிர்த்து தொழிற்சங்கங்கள்  இன்று  23.05.2017  சென்னையில் உண்ணாவிரதத்தில் ஈடுபடுகின்றனர்.

நலத்திட்டங்களுக்கு ஆபத்து ஏற்பட்டும்

குறிப்பாக நல செஸ் பெறுவதற்காக மத்திய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டத்தால் தொழிலாளர் சார்ந்த கல்வி, குடியிருப்பு, குடிநீர் போன்றவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஜி.எஸ்.டி. மசோதாவால் அனைத்து மாநிலங்களிலும் கட்டுமானத் தொழிலாளர்களின் நலத்திட்டங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர் சட்டம் 1982 ன் படி பெறப்படும் கட்டுமான, ஆட்டோ, மீன் தொழிலாளர்களுக்கான நல லெவி பெற முடியாத நிலை ஏற்படும். மத்திய சமூகப்பாதுகாப்பு சட்டம் வரைவு III வெளியிடப்பட்டு அதன் மூலம் அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கான நலவாரியங்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
 

ஜூலை முதல் 18 சதவீதம் வரை வரி

இது தவிர தமிழ்நாட்டில் உள்ள நலவாரியங்களில் கிடைக்கும் பணப்பயன்கள் - இயற்கை மரணம், பிரசவ உதவி, கல்வி உதவி ஆகியவற்றை பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மிகக்குறைவாக உள்ளது. எனவே அனைத்து மத்திய தொழிற்சங்கள் மற்றும் துறை ரீதியான தொழிற்சங்கங்கள், அனைத்து மாவட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புக்கள் ஆகியவை ஜி.எஸ்.டி மசோதா - செஸ் சட்டங்கள் ரத்து குறித்த கோரிக்கைகளை மத்திய பா.ஜ.க. அரசுக்கு முன் வைக்கிறார்கள். ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் இது வரை அதிகபட்சம் 5 சதவீதம் வரை வரி செலுத்திய உணவகங்கள் வரும் ஜூலை முதல் 18 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வரிச்சுமை உணவகங்களுக்கு செல்லும் பொது மக்கள் மீது திணிக்கப்படும். எனவே மத்திய அரசு இந்த கூடுதல் வரியை குறைத்து சாதாரண மக்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நலவாரிய கட்டுமான செஸ் பாதிக்கப்படாமல் ..

குறிப்பாக தொழிற்சங்கங்களை கலந்து பேசாமல் முடிவெடுத்த செஸ் ரத்துகளை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். தொழிலாளர் நலனுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரியை காரணம் காட்டி கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்துக்கான கட்டுமான செஸ் பாதிக்கப்படாமல் காக்கப்பட வேண்டும்.

தொழிற்சங்கங்களுடன் தேசிய கலந்தாய்வு கூட்டம் நடத்தி ஒப்புதலை பெற்ற பிறகே புதிய சட்டத்தை கொண்டுவர வேண்டும். தமிழ்நாடு பட்ஜெட்டில் 3 சதவீதம் நல வாரியங்களுக்கு ஒதுக்கீடு, தொழிலாளர்கள் வருவாய்த்துறை குறுக்கீடின்றி தொழிற்சங்கங்கள் மூலம் கட்டாயப் பதிவு, இ.எஸ்.ஐ மருத்துவ வசதி, ரூ. 3,000 ஓய்வூதியம், பணப்பயன்கள் அதிகரிப்பு, மழைக்கால நிவாரணம், வீட்டுவசதி, வங்கி கடன் ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

எனவே தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்” என்று தனது அறிக்கையில் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்