முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி மலர்காட்சியை 1.14 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனர்

திங்கட்கிழமை, 22 மே 2017      நீலகிரி

ஊட்டி மலர்காட்சியை 1.14 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்துள்ளனர்.

121-வது மலர்காட்சி

கோடை சீசனை முன்னிட்டு ஊட்டியில் ஆண்டுதோறும் மே மாதத்தில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர்காட்சி நடத்தப்படும். அதன்படி இந்தாண்டுக்கான மலர்காட்சியை கடந்த 19_ந் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தொடங்கி வைத்து பேசினார். மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா 21_ந் தேதி நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர்(பொறுப்பு) வித்யாசாகர் ராவ் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்களை வழங்கினார்.

1.14 லட்சம் சுற்றுலாப் பயணிகள்

ஊட்டி மலர்காட்சியை தமிழக முதல்வர் தொடங்கி வைப்பதும், நிறைவு விழாவில் தமிழக ஆளுநர் பரிசு வழங்கியதும் மலர்காட்சிக்கு கிடைத்த பெருமைஎன தோட்டக்கலை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஊட்டியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற 121_வது  மலர்காட்சியைக்காண தமிழகத்தில் பல்வேறு பகுதிகள், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து மலர்காட்சியை கண்டு ரசித்தனர். இதில் முதல்நாளான 19_ந் தேதி வெள்ளிக்கிழமையன்று 30, 349 சுற்றுலாப் பயணிகளும், இரண்டாம் நாளான சனிக்கிழமை 35,826 சுற்றுலாப் பயணிகளும், நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை 47, 744 பேரும் என மொத்தம் மூன்று நாட்களில் 1 லட்சத்து 13 ஆயிரத்து  919 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

மேலும் ஒரு வாரம்

மலர்காட்சி நாள் நிறைவு பெற்றாலும் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக மலர்காட்சியின் போது மலர்களினால் வடிவமைக்கப்பட்டிருந்த மகாபலிபுரம் கோவில் வடிவம் மற்றும் மலர்மாடத்தில் காட்சிக்காக 15 ஆயிரம் தொட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர்களையும் இன்னும் ஒரு வார காலத்திற்கு பார்வையிடலாம் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்