முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குல்பூஷன் ஜாதவ் வழக்கை விரைந்து விசாரிக்க சர்வதேச நீதிமன்றத்துக்கு பாகிஸ்தான் கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      உலகம்
Image Unavailable

ஹேக் நகர் : குல்பூஷன் ஜாதவ் வழக்கு விசாரணையை விரைந்து நடத்தி முடிக்குமாறு கோரிக்கை விடுத்து சர்வதேச நீதிமன்றத்துக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'தி எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன்' நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், "ஹேக் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் சர்வதேச நீதிமன்றத்துக்கு பாகிஸ்தான் எழுதியுள்ள கடிதத்தில் குல்பூஷன் ஜாதவ் வழக்கு விசாரணையை இன்னும் ஓரிரு வாரத்திலேயே தொடங்கி நடத்தி முடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பரில்  நீதிபதிகளுக்கான தேர்தல்

சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளுக்கான தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கு முன்னதாகவே ஜாதவ் வழக்கு விசாரணையை முடித்துவிட வேண்டும் என்பதற்காகவே பாகிஸ்தான் இத்தகைய கோரிக்கையை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜாதவ் வழக்கில் அக்டோபர் மாதத்தில் விசாரணையை மேற்கொள்ள சர்வதேச நீதிமன்றம் திட்டமிட்டிருப்பதாகவும் ஆனால் பாகிஸ்தானோ அடுத்த ஆறு வாரங்களில் வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

அட்டர்னி ஜெனரல் மாற்றமா?

இதற்கிடையில், ஜாதவ் வழக்கில் பாகிஸ்தான் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் சரியான வாதங்களை முன்வைக்கவில்லை என்ற சர்ச்சை வலுத்துள்ளது. இதனால், எதிர்காலத்தில் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தான் தரப்பில் ஆஜராவதற்கு அட்டர்னி காவர் குரைஷிக்குப் பதிலாக வேறு யாரையாவது ஆஜர் படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.  ஆனால், பாகிஸ்தான் சட்ட அமைச்சகமோ குரைஷி சிறப்பாகவே வாதாடினார். அவரை மாற்றத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது.

'பாக்., வழக்கறிஞரின் கவலை'

பாகிஸ்தான் பார் கவுன்சில் நிர்வாகக் குழு உறுப்பினர் ரஜீல் கம்ரான் ஷேக் கூறும்போது, "சர்வதேச நீதிமன்றத்தில் இதுவரை பாகிஸ்தான் எதிர்கொண்ட வழக்குகளில் 2% மட்டுமே சாதகமாக முடிந்துள்ளன. இந்தியாவுக்கு 60% சாதமாக முடிந்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் பல நூறு கோடி பணம் செலவழித்தும் பாகிஸ்தான் சர்வதேச முகமைகளில் நடைபெற்ற முக்கிய வழக்குகளை இழந்துள்ளது.

இப்போதுகூட ஜாதவ் வழக்கில் சரியான வாதம் முன்வைக்கப்பட்டிருந்தால் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருக்கும். ராணுவத்துக்கும் அரசியல் தலைமைக்கும் இடையேயான அதிகாரப் போட்டியில்தான் வெளியுறவுக் கொள்கைகளுக்கும் தேச பாதுகாப்புக்கும் இடையேயான இடைவெளி பெரிதாகிறது. இந்த இடைவெளி சரிசெய்யப்படவில்லை என்றால் பாகிஸ்தான் பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும்" என்றார்.

ஜாதவ் வழக்கு பின்னணி?

இந்திய கடற்படையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ். கடந்த 2016 மார்ச் 3-ம் தேதி அவர் ஈரானில் இருந்து பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், மாஸ்கெல் பகுதிக்குச் சென்றார். அங்கு அவரை அந்த நாட்டு உளவுத் துறையினர் கைது செய்தனர். அவர் பாகிஸ்தானுக்கு எதிராக சதி செய்ததாகவும் கராச்சி குண்டுவெடிப்பில் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த ராணுவ மாஜிஸ்திரேட், குல்பூஷன் ஜாதவுக்கு ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.

இதனைத் தொடர்ந்து குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா தரப்பில் முறையிடப்பட்டது. இந்நிலையில் மே 18 அன்று குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்