முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில், நீடித்த மானாவரி விவசாயத்திற்கான இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டு பயிற்சியினை கலெக்டர் ச.ஜெயந்தி தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், நீடித்த மானாவரி விவசாயத்திற்கான இயக்கம் சார்பில்  மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டு பயிற்சியினை   மாவட்ட கலெக்டர்  ச.ஜெயந்தி  தொடங்கி வைத்தார்.

மானாவாரி விவசாயம்

திருப்பூர் மாவட்டத்தில், மானாவாரி பகுதிகளில் சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், மானாவாரி பயிர்கள் குறிப்பாக பயறுவகைகள், சிறுதானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி திறன் மற்றும் உற்பத்தியினை பெருக்கி மானாவாரி விவசாயிகளின் வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்திட நீடித்த மானாவாரி விவசாய இயக்கத் திட்டம் 2016-17 முதல் 2019-20 வரை செயல்படுத்தப்பட உள்ளது. 2016-17 ஆம் ஆண்டு இத்திட்டம் திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, காங்கயம், மூலனூர், திருப்பூர் மற்றும் ஊத்துக்குளி வட்டாரங்களில் உள்ள தலா 1000 ஏக்கர் பரப்பிலான மானாவாரி தொகுப்புகள் அமைத்து, தொகுப்பில் உள்ள விவசாயிகளை 23 குழுக்களாக ஒருங்கிணைத்து திட்டம் நடைமுறைபடுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தில் வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்னை மற்றும் வணிகம், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் இணைந்து செயல்படவுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில், மானாவாரி விவசாயிகளுக்கிடையில் இத்திட்டத்தினை சிறப்பான முறையில் எடுத்து செல்ல ஏதுவாக பங்கேற்புத்துறை அலுவலர்களுக்கான மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

உற்பத்தி திறன்

இப்பயிற்சியினை திருப்பூர் மாவட்ட கலெக்டர்  துவக்கி வைத்து இத்திட்டத்தினை அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்திட அலுவலர்களுக்கு  அறிவுரைகளை வழங்கினார். மானாவாரி பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி விவசாயிகளின் வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தினை  உயர்த்திடவும் அனைத்து துறை அலுவலர்களும் முனைப்புடன் செயல்படவும் மாவட்ட கலெக்டர்   அறிவுறுத்தினார்.

மேலும், இப்பயிற்சி முகாமில் வேளாண்மை பயிர்கள் உற்பத்தியை மேம்படுத்துதல், கூட்டுறவுத்துறையின் மூலம் வழங்கப்படும் நிதி உதவி மற்றும் மானாவாரி விவசாயிகளை பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்தல் குறித்தும், மானாவாரி பகுதிகளில் நீர் மேலாண்மை குறித்தும், நீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்குதல், கோடை உழவு மேற்கொள்ளுதல் மற்றும் வேளாண் கருவிகள் வாடகை மையம் ஏற்படுத்துதல் குறித்தும்,  மானாவாரி பகுதிக்கு ஏற்ற கறவை மாட்டின் இனங்கள், அடர் தீவனம் தயாரித்தல் மற்றும் கால்நடைகளின் நோய் தடுப்பு முறைகள் குறித்தும், உழவர் உற்பத்தியாளர் குழு அமைத்தல் மற்றும் வேளாண் பொருட்கள் மதிப்புக்கூட்டுதல் ஆகியவற்றை குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர், எம்.ஜி.முகமது இக்பால், வேளாண்மை துணை இயக்குநர் மு.தழிழ்செல்வன், மாவட்ட கலெக்டர் அவர்களின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பொ.பழனிக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கே.வி.எஸ். குமார்,   வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்