முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு ஆவின் நடப்பாண்டு ரூ.36 கோடி லாபம்

வியாழக்கிழமை, 25 மே 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்ட, கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய (ஆவின்) ஆண்டு பேரவை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. பொது மேலாளர் லதா வரவேற்றார். ஆவின் தலைவர் ராமசாமி பேசியதாவது ஈரோடு ஆவின் கீழ், 704 கூட்டுறவு சங்கங்கள், அதன் கீழ், 59 இடங்களில் பால் தொகுப்பு சேகரிப்பு மையங்கள் செயல்படுகின்றன. இவ்விடங்களில் சேகரமாகும் பாலை, 23 குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட டேங்கர் லாரிகள் மூலம், ஈரோடு ஆவின் மற்றும் சென்னை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. விரைவில், 68 சேகரிப்பு மையங்களாக எண்ணிக்கையை உயர்த்தி, 28 லாரிகள் மூலம் பாலை இயக்கம் செய்ய உள்ளோம். மத்திய அரசின் நிதி, 48 கோடி, மாநில அரசின் நிதி, 24 என, 72 கோடி ரூபாயில், ஒருங்கிணைந்த பால்பண்ணை மேம்பாட்டு திட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து பால் சொசைட்டி, பால் வழங்கும் உறுப்பினர்கள், ஆவின் மற்றும் சென்னை தலைமை அலுவலகத்தை இணைத்து ஆன்லைன் வசதி செய்யப்படுகிறது.

36 கோடி ரூபாய் லாபம்

இதில், ஈரோடு ஆவின் ‘மாதிரி பணியை’ செய்து வருகிறது. இப்பணி ஓராண்டுக்குள் முடியும். அப்போது, தொகுப்பு மையத்தில் உறுப்பினர் பால் வழங்கியதும், உறுப்பினர் வழங்கிய பாலின் அளவு, தரம், கொழுப்பு அளவு போன்ற விபரங்கள், அத்திட்டத்தில் உள்ளவர்கள் அறியும் வகையில் பதிவாகும். இதன் மூலம், தவறுகள் தவிர்க்கப்பட்டு, உரிய விலை உறுப்பினருக்கு கிடைக்கும். நடப்பாண்டில், ஈரோடு ஆவின் நிர்வாகம், 36 கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளது. இதில், பால் உற்பத்தியாளர்கள், உறுப்பினர்களுக்கு லிட்டருக்கு, 1.65 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 13.36 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். தவிர, பால் பெறும்போது, லிட்டருக்கு, 10 காசு வீதம், நிர்வாக செலவு, மருந்து வாங்குதல், பயிற்சி போன்றவைகளுக்காக வசூலிக்கப்பட்டது. அதில் மீதமான, ஐந்து கோடி ரூபாய் திரும்ப வழங்க முடிவு செய்து, 18 கோடி ரூபாயாக ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்கான விழா, பத்து நாட்களில் நடக்க உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கால்நடை மண்டல இணை இயக்குனர் ரவிச்சந்திரன், ஆவின் துணை இயக்குனர்கள் ராஜராஜன், இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ கிட்டுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்