முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நாளை பழக்கண்காட்சி தொடக்கம்

வியாழக்கிழமை, 25 மே 2017      நீலகிரி
Image Unavailable

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 59-வது பழக்கண்காட்சி நாளை தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கோடை விழா

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர், காய், பழம், ரோஜா கண்காட்சிகள் நடத்தப்படும். அதன்படி இந்தாண்டு கோடை விழா நிகழ்ச்சிகள் கடந்த 6_ந் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. அதனைத்தொடந்து 12,13,14 தேதிகளில் கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சியும், 13, 14 தேதிகளில் ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா காட்சியும், 19,20,21 தேதிகளில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர்காட்சியும் நடத்தி முடிக்கப்பட்டன. இந்த நிலையில் கோடை விழாவின் இறுதி கண்காட்சியான பழக்கண்காட்சி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 27 மற்றும் 28 தேதிகளில் நடைபெறுகிறது.

பூங்கா குறித்து ஒரு பார்வை

குன்னூர் சிம்ஸ் பூங்கா கடந்த 1874ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகை மரங்கின் புகலிடமாக விளங்கும் இப்பூங்காவில் 104 ஆண்டு பழமை வாய்ந்த யானைக்கால் மரம், ருத்ராட்சை மரம், காகிதம், டர்பன்டைன், ஜெகர்தண்டா. கெமேலியா உப்ட பல்வேறு மரங்கள் உள்ளன. பழக்காட்சியை முன்னிட்டு பூங்காவில் டேலியா, மேரிகோல்டு, சால்வியா, பான்சி, லில்லியம்ஸ் உட்பட 50 ரகங்களில் 1,50 லட்சம் மலர்செடிகள் நடவு செய்யப்பட்டன. தற்போது இந்த செடிகளில் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இப்பழக்காட்சியில் நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பழப்பழப்பயிர்களான பேரி, பீச், பிளம்ஸ், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, துரியன், லிச்சி, ரம்பட்டான், மங்குஸ்தான உள்ளிட்ட பழங்கள் காட்சிப்படுத்தப்படும். பழக்காட்சியையொட்டி பழங்கினால் ஜல்லிக்கட்டு வடிவம் அமைக்கப்பட்டு வருகிறது. அத்துடன் அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தொடக்க விழா

59_வது பழக்கண்காட்சி தொடக்க விழா நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. விழாவிற்கு தோட்டக்கலை இணை இயக்குநர் மணி வரவேற்று பேசுகிறார். மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமை தாங்கி பேசுகிறார். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துணை ஆணையர் அர்ச்சனா பட்நாயக் சிறப்புரையாற்றுகிறார். வேளாண்துறை முதன்மை செயலர் முன்னிலை வகிக்கிறார். விழாவில் ககன்தீப் சிங் பேடி விழாவினை தொடங்கி வைத்து விழாப்பேருரையாற்றுகிறார். விழாவில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

பழக்கண்காட்சியை யொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 28_ந் தேதி மாலை நடைபெறும் விழாவில் பரிசுக்கோப்பைகள் வழங்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்