முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் :கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 26 மே 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான் அவர்கள் தலைமையில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக  நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

அணையின் நீர் இருப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 23.05.2017 அன்று பேச்சிப்பாறை அணையின் நீர்மட்ட இருப்பு 9.75 அடியும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்ட இருப்பு 17.75 அடியும்,                     சிற்றார்-1 அணையின் நீர்மட்ட இருப்பு 1.21 அடியும், சிற்றார்-2 அணையின் நீர்மட்ட இருப்பு 1.31 அடியும், பொய்கை அணையின் நீர்மட்ட இருப்பு 0.30 அடியும், மாம்பழத்துறையாறு நீர் மட்ட இருப்பு 22.97 அடியும் உள்ளது.  23.05.2017 அன்று வரை வேளாண் விரிவாக்க மையம் மூலம் 84.175 (மெ.டன்) பரப்பில் நெல் பயிறு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தடையின்றி உரம் விநியோகிப்பதற்காக டான்பெட் நிறுவனத்தில் 350 மெட்ரிக் டன்னும், கூட்டுறவு சங்கங்களில் 1,750 மெட்ரிக் டன்னும், தனியார் விற்பனையாளர்களிடம் 621 மெட்ரிக் டன்னும் ஆக மொத்தம் 2,721 மெட்ரிக் டன் உரம் இருப்பில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

கோரிக்கை மனுக்கள்

பின்னர் கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது பதில்கள் வாசிக்கப்பட்டது.   நாஞ்சில்நாடு புத்தனார் கால்வாய் மூலம், பாசனம் பெறும் தேவகுளத்தின் ஒருபகுதி  வழியாக நான்கு வழிச் சாலை அமைய உள்ளதால், பாதிப்படைகின்ற பகுதிக்கு குளம் ஆழப்படுத்த வேண்டி, மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, ஒப்புதலுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி ஆதாரம் கிடைக்கப்பெற்று, பணி மேற்கொள்ளும்போது, வண்டல்மண் எடுப்பதற்கு அனுமதி கோரும் பட்சத்தில் வண்டல்மண் எடுக்க, பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், குன்னத்துகுளம் மற்றும் கல்படி குளத்தின் குடிமராமத்து பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும், வெள்ளிச்சந்தை ஊராட்சிக்குட்பட்ட கண்ணமங்கலம் குளத்தில் உள்ள பழைய மடையிலிருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க, வரும் நிதியாண்டில், நிதி நிலைமைக்கேற்றவாறு, திருகு ஷட்டர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், செட்டிமுண்டார் குளத்தில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய, பராமரிப்பு நிதி ஒதுக்கீடு செய்யும்பட்சத்தில், முன்னுரிமை அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், அனந்தனாறு கடைவரம்பு பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருக்கும்பட்சத்தில், அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஆண்டார்குளம் செவிலியர் மடை சீரமைத்திட,                      ரூ. 4 இலட்சம் செலவாகும்.  பொதுப்பணித்துறையின் நடப்பாண்டு, பராமரிப்பு நிதி ஒதுக்கீட்டிற்கேற்ப, முன்னுரிமை அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், இளையநயினார் குளத்தில் மடைகள் பழுதுபார்த்து, குளம் தூர்வாரி கரை பலப்படுத்த வேண்டி, குடிமராமத்து திட்டத்தின்கீழ், ரூ. 4 இலட்சம் செலவில் நிதி ஆதாரம் கோரப்பட்டுள்ளது. ஒப்புதல் பெறப்பட்டு, நிதி ஆதாரம் கிடைக்கப்பெற்றதும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது.  அதனை தொடர்ந்து கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பலர் பங்கேற்பு

இக்கூட்டத்தில் இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை)  இளங்கோ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்)  நிஜாமுதீன், பொதுப்பணித்துறை  (நீர் ஆதார அமைப்பு) செயற்பொறியாளர் பொறி சுப்பிரமணியன், வட்டாட்சியர்கள், செயல் அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாய பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து