வீடூர் அணையில் விவசாய நிலங்களுக்கு வண்டல் மண் எடுக்கும் பணி அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2017      விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் வீடூர் அணையில் விவசாய நிலக்களுக்குத் தேவைப்படும் வண்டல் மண் எடுக்கும் பணியை, கலெக்டர் .இல.சுப்பிரமணியன்,., தலைமையில் சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்வீடூர் அணையில் 17 விவசாயிகளுக்கு 901 டிராக்டர் லோடுகள் வண்டல் மண் எடுப்பதற்கான ஆணையை,  சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

 பல்வேறு திட்டங்கள்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசையுடன்,  தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் தலைமையில், தமிழகத்தை முன்னேற்றும் வகையில் இவ்வரசு நல்லமுறையில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 2016 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தவறியதால் இதுவரை இல்லாத அளவிற்கு வறட்சி நிலவுகிறது. 

அரசு முடிவு

இந்த வறட்சியினால் ஏற்படும், குடிநீர் பிரச்சனையை தீர்க்கவும், நீர் ஆதாரங்களை சிக்கனமாக பயன்படுத்தி இவ்வறட்சியினை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  அதற்காக மழைநீரை சேமித்தல், புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தி, ஒழுங்குபடுத்த, நீர்நிலைகளை மீட்டெடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

விவசாயிகள் பயன்பெறும் பொருட்டு விவசாய நிலங்களை செம்மைப் படுத்த தங்கள் கிராமம் அல்லது அருகாமையில் உள்ள கிராமங்களில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், நீர்நிலைகள் மற்றும் அணைகளை தூர்வாரி, தூர்வாறும் வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசினால் ஆணையிடப்பட்டுள்ளது.

இலவசமாக வண்டல் மண்

அதன்படி, நஞ்சை நிலம் ஏக்கர் ஒன்றிற்கு 75 கனமீட்டரும் (25 டிராக்டர் லோடுகள்), புஞ்சை நிலம் ஏக்கர் ஒன்றிற்கு 90 கனமீட்டரும் (30 டிராக்டர் லோடுகள்), வீட்டு பயன்பாட்டிற்கு 30 கனமீட்டரும் (10 டிராக்டர் லோடுகள்), மண்பாண்டல் தொழில் செய்பவர்களுக்கு 20 கனமீட்டலும் (20 டிராக்டர் லோடுகள்) அளவிற்கு வண்டல் மண் மற்றும் சவுடு மண்ணினை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.  விவசாய நிலங்களுக்கு இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இலவசமாக வண்டல் மண் பெற்றுக்கொள்ளலாம்.

அனுமதி ஆணைகள்

டூர் அணை 1958 ஆம் ஆண்டு கட்டப்பட்டு,  இப்பொழுதுதான் முதல்முறையாக வண்டல் மண் எடுக்க ஆணை வழங்கப்படுகிறது.  இப்பகுதியைச் சார்ந்த 17 விவசாயிகளுக்கு இன்று 901 டிராக்டர் லோடுகள் வண்டல் மண் எடுக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.  மேலும் வண்டல் மண் எடுப்பதற்கு 24 மனுக்கள் இன்று பெறப்பட்டுள்ளது.  மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து, இன்றே ஆணை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.  மேலும், இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் இதர பணிகளுக்குத் தேவைப்படும் வண்டல் மண் விவரங்களை அவ்வட்டத்தைச் சேர்ந்த வட்டாட்சியருக்கு விண்ணப்பித்து, இலவசமாக வண்டல் மண் பெற்றுக்கொண்டு பயனடைய வேண்டுமென  சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

பலர் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், திண்டிவனம் சார் ஆட்சியர் பிரபுசங்கர்,., ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் செஞ்சிசேவல் வெ.ஏழுமலை, வானூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.சக்கரபாணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்பாசனம்) சண்முகம், இணை இயக்குநர் (வேளாண்மை) கார்த்திகேயன், உதவி இயக்குநர் (கனிமவளம்) ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் ஞானசேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து