மாட்டு இறைச்சி மீதான தடையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் புதுவை முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2017      புதுச்சேரி

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிறைவேறாத வாக்குறுதிகள்

மத்தியில்ஆளும் பாரதிய ஜனதா அரசு 3-வதுஆண்டு முடிந்து 4-வது ஆண்டில்அடி எடுத்து வைத்துள்ளது. ஆட்சியின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கிநாடு முழுவதும் விழா கொண்டாடப் போவதாக கூறியுள்ளனர். இந்த 3 ஆண்டுகளில் தேர்தலின் போது கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப் படவில்லை. ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்று அறிவித்தனர். ஆனால் 3 ஆண்டுகளில் 45 லட்சம் இளைஞர்களுக்கு கூட வேலைவாய்ப்பு அளிக்கப் படவில்லை. இந்த வாக்குறதிகள் கூட மத்திய அரசால் நிறைவேற்ற முடியவில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருந்தது. உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது கூட பொருளாதார வளர்ச்சியை 7.5 சதவீதமான காங்கிரஸ் அரசு நிலை நிறுத்தியது. ஆனால் பாரதிய ஜனதா முதல் ஆண்டில் 6.5, 2-ம்ஆண்டில் 6.7, 3ம் ஆண்டில் 7.1 என வளர்ச்சி சதவீதம் உள்ளது.

முன்னேற்றம் இல்லை

பொருளாதார வளர்ச்சியில் கூட மத்திய பாரதிய ஜனதா அரசு குறிப்பிட்ட முன்னேற்றத்தை எட்டவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நகர்புற மேம்பாடு, கிராமபுற கல்வி, கிராமபுற சுகாதாரம் ஆகிய திட்டங்களின் பெயரை மாற்றி புதிய திட்டங்கள் போல பாரதிய ஜனதா அரசு அறிவித்துள்ளது

இறைச்சிக்கு தடை

திட்டக்குழுவை கலைத்து நிதி அயோக் என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். ஆனால் வேறு எந்த மாற்றமும் செய்யவில்லை. நேற்றைய தினம் பாரதிய ஜனதா அரசு ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காளை மாடுகள், எருது, கன்றுக்குட்டிகள், ஒட்டகம் ஆகியவற்றின் இறைச்சியை சாப்பிட தடை விதித்துள்ளனர்.  இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும், கேரளாவிலும் மாட்டு இறைச்சியே பிரதான உணவாக உள்ளது. அடுத்து, ஆடு, கோழி, மீன் ஆகியவற்றையும் சாப்பிடக் கூடாது என மத்திய அரசு அறிவிக்கலாம். நாட்டு மக்கள் சாப்பிடாமல் பட்டினியோடு இருந்தால் நாடு வளர்ச்சி அடையும் என்று கூறவும் வாயப்பு உள்ளது. நாட்டு மக்கள் எதை சாப்பிட வேண்டும், எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என்பதில் எல்லாம் மத்திய அரசு தலையிட முடியாது. இது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவது ஆகும். மத்திய பாரதிய ஜனதா அரசு சர்வாதிகாரத்தோடு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

திரும்ப பெற வேண்டும்

புதுவையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஏராளமானோர் வசிக்கிறார்கள். அவர்கள் உணவில் மாட்டு இறைச்சியை பிரதானமாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதனை சாப்பிடுவதை அரசால் தடுக்க முடியாது. எனவே பிரதமர் இந்த முடிவை மாற்றி கொண்டு மாட்டு இறைச்சி தடையை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து