முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் சு.பழனிசாமி, தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 29 மே 2017      நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நேற்று மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, தலைமையில் நடைபெற்றது.

வங்கிக்கடன்

மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 11 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 200 என மொத்தம் 211 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஒருவார காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உரிய முடிவினை மனுதாரர்களுக்கு அறிவிக்குமாறு மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 22 நபர்களுக்கு ரூ.4,78,000 மதிப்பிலான நவீன செயற்கை கால்களையும், காவல்துறையைச் சேர்ந்த தலைமைக் காவலர் நாகராஜன் என்பவர் பணியிலிருக்கும் போதே உயிரிழந்தமைக்காக அவரது மனைவி என்.விமலா என்பவருக்கு கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலருக்கான பணி நியமன ஆணையினையும், கலைப் பண்பாட்டுத்துறை சார்பில் நலிவுற்ற இசைக் கலைஞர்கள் 8 பேருக்கு தலா ரூ.7500 வீதம் ரூ.60,000 மதிப்பிலான காசோலைகளையும், தரங்கம்பாடி வட்டம், சாத்தான்குடி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ரோணித் கிருஷ்வான் தீ விபத்தில் இறந்தமைக்காக அவர்தம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.1,00,000-க்கான காசோலையினையும் மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, வழங்கினார்.

இக்கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கோ.தேன்மொழி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து