முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருந்து கடைகள் இன்று வேலை நிறுத்தம்: பாதிப்பை தவிர்க்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திங்கட்கிழமை, 29 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, மத்திய அரசு அறிவித்துள்ள ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மற்றும் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் ஓட்டல்கள் மற்றும் 30 ஆயிரம் மருந்து கடைகள் இன்று அடைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை எடுத்துள்ளதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கடும் கண்டனம்

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிக்க வகை செய்யும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) முறையை அமல்படுத்த மத்திய அரசு இறுதி முடிவு எடுத்து ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைபடுத்த உள்ளது. ஜி.எஸ்.டி. வரி 4 அடுக்காக 5, 12, 18, 28 சதவீதம் என பிரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்புக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக வணிகர்கள் இந்த வரி விதிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடும் பாதிப்பு

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு பொதுமக்களுக்கு கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் விலைவாசி உயரும் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். அது மட்டுமல்ல ஓட்டல்கள் நடத்துபவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் தென் மாநிலங்கள் முழுவதும் இன்று ஓட்டல்களை அடைத்து போராட்டத்தில் ஈடுபட போவதாக ஓட்டல் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

திரும்ப பெற வேண்டும்

இதுகுறித்து தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு கூறியதாவது:-

இந்தியா முழுவதும் ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் குறைவாக விற்பனை செய்யும் சிறிய ஓட்டல்களுக்கு தற்போது அரை சதவீதம் முதல் முக்கால் சதவீதம் வரை வரி உள்ளது. இதை வாடிக்கையாளர்களிடம் நாங்கள் வசூலிப்பதில்லை. ஆனால் தற்போது ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வரி 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதே போல் ரூ.50 லட்சத்துக்கு அதிகமாக விற்பனை நடைபெறும் சாதாரண உணவகங்களுக்கு 2 சதவீதம் மதிப்பு கூட்டு வரி விதிக்கப்பட்டு வந்தது. தற்போது 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏ.சி. வசதி உள்ள சாதாரண ஓட்டல்களுக்கு தற்போது 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அதிக வரியை ஓட்டல் நடத்துபவர்களால் கட்ட முடியாது. வாடிக்கையாளர்களிடம் தான் வசூலிக்க வேண்டிய நிலை உள்ளது. 100 ரூபாய்க்கு சாப்பிட்டால் வரியுடன் சேர்த்து 118 ரூபாய் பில் கட்ட வேண்டும். இதனால் பொதுமக்கள் ஓட்டல்களுக்கு வந்து சாப்பிட யோசிப்பார்கள். எனவே மத்திய அரசு இந்த வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். இதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து 50 ஆயிரம் ஓட்டல்கள் இன்று அடைக்கப்படும். ஓட்டல்களை புதன் கிழமை தான் திறப்போம். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருக்கும்.

தென் மாநிலங்களில் ....

இந்த போராட்டம் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களிலும் நடைபெறுகிறது. தென் மாநிலங்களில் மட்டும் சுமார் 5 லட்சம் ஓட்டல்கள் மூடப்படுகிறது. ஜூன் 3-ம் தேதி ஜி.எஸ்.டி. வரி தொடர்பாக மத்திய அரசு ஒரு கூட்டம் கூட்டி ஆலோசனை கேட்க உள்ளது. இந்த கூட்டத்துக்கு பிறகும் ஜி.எஸ்.டி. வரியை குறைக்காவிட்டால் இந்தியா முழுவதும் ஓட்டல்களை அடைத்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசுக்கு எதிர்ப்பு

மருந்துப் பொருட்களை ஆன்லைனில் வாங்கும் சட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மருந்து கடைகளும் மூடப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆன்லைன் மருந்து வணிகத்தால் நோயாளிகள், ஆன்லைனில் மருந்து வாங்கும் போது, போலி மருந்து மற்றும் காலாவதியான மருந்துகளை மாற்றி அனுப்ப, வாய்ப்பு அதிகம் என்று வணிகர்கள் கூறுகின்றனர். மருந்து வணிக உரிம கட்டணத்தை, 3,000 ரூபாயில் இருந்து 30 ஆயிரம் ரூபாயாக, மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதை எதிர்த்தும், கடைகள் மூடப்படுகின்றன. எனினும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருந்துக் கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருந்துக் கடைகள் மட்டுமே பங்கேற்பதாகவும், கூட்டுறவு மருந்தகங்கள் மற்றும் அம்மா மருந்தகங்கள் உள்ளிட்டவை வழக்கம் போல இயங்கும் என்று அரசு விளக்கமளித்துள்ளது.

திறக்க நடவடிக்கை

இதற்கிடையே சென்னை எழும்பூர் நலவாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்களுக்கான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது. அப்போது பேசிய அமைச்சர், கடைகளை திறக்க மருந்து வணிகர்கள் உறுதியளித்திருப்பதாகவும், இதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் கடையடைப்பு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மருந்து விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் மோகன்குமார்  பெரிய மருந்து நிறுவனங்கள் கடையடைப்பில் பங்கேற்காததால் தாங்களும் பங்கேற்கவில்லை என்று தெரிவித்தார். மேலும் சென்னை, மதுரை, கரூர் உள்ளிட்ட 3 மாவட்டங்கள் கடையடைப்பில் பங்கேற்காது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து