கரூர் அருள்மிகு மாரியம்மன் மத நல்லிணக்கத்தையும் காக்கும் தெய்வம்

செவ்வாய்க்கிழமை, 30 மே 2017      ஆன்மிகம்
Mariamman

Source: provided

கரூரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது மாரியம்மன் கோவில். சக்திவாய்ந்த அம்மன் என்றும் கேட்ட வரம் தரும் மாரியம்மன் என்று பக்தர்களால் நம்பிக்கையுடன் வழிபட்டு வரப்படுகிறது.

கரூர் மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்யதிசை பார்வையுடன் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றாள். மேலும் மதங்களுக்கு அப்பாற்பட்டு மத நல்லிணக்கம் பேணும் புண்ணியஸ்தலமாக இக்கோவில் விளங்குகிறது. சுமார்100 ஆண்டுகளுக்கு முன்பு முன்னோர்கள் தான்தோன்றி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து பிடி மண் எடுத்துவந்து இந்த கோயிலை அமைத்துள்ளனர். கோவிலில் பரம்பரை அறங்காவலராக முத்துக்குமார் உள்ளார். இவரது முன்னோர்கள் இந்த கோயிலை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

திருச்சி சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தபடியாக உள்ள முக்கியஸ்தலமாக கரூர் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் 22 நாட்கள் திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். இத்திருவிழாவில் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்து கண்ணடக்கம், பூ மிதித்தல், அக்னிசட்டி எடுத்தல், அங்க பிரதட்சணம், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு வழிபாடு, உருவார பொம்மை, அலகு குத்துதல், போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தி மாரியம்மனின் அருளை பெறுகின்றனர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திருவிழா அன்று பந்தல் அமைப்பதை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே முகமது என்ற முஸ்லிம் இனத்தை சேர்ந்தவர் முன் நின்று நடத்தி வைத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றனர்.

 இன்றும் அவை தலைமுறை, தலைமுறையாக தற்போதும் தொடர்ச்சியாக நிறைவேற்றி வருவது தனி சிறப்பு. மேலும் அம்மன் வழிபாட்டில் சில பூஜைகளை ஏற்பாடு செய்வதும் அம்மன் கோவில் மதிய பூஜை தீர்த்தத்தை வாங்கி அம்மை நோய் தாங்கியவர்களுக்கு கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் நம்பிக்கையோடு கொடுத்து வழிபடுவதும் கோவிலில் தினமும் நடைபெறும் நிகழ்ச்சியாகும். எனவே மத நல்லிணக்கம் பேணும் புண்ணியஸ்தலமாக கரூர் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. கோவில் திருவிழா அன்று கம்பம் ஆற்றில் விடுவது வெகு விமரிசையாக நடைபெறும். கம்பம் விடும் நாளன்று சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் உடன் கம்பத்திற்கு தயிர் சாதம் படைத்து வழிபாடு நடைபெறும்.

பின்னர் மாரியம்மனுக்கும் கம்பத்திற்கும் மாலை அணிவித்து சிறப்பு வழிபாடுகளுடன் கம்பம் கோவிலில் இருந்து ஊர்வலமாக ஆற்றுக்கு எடுத்து செல்லப்படும். அப்போது கம்பத்திற்கு காவலாக மாவடி ராமசாமி அம்சமாக அரிவாள் எடுத்து செல்லப்படும். இவ்வாறு ஆற்றுக்கு அனுப்பும் கம்பத்திற்கு சில வரலாறுகள் உண்டு. மஞ்சள் நீர் கம்பம் என்பது கடவுளை குறிக்கும். கடவுளின் பிரதிபலிப்பே கம்பம் எனப்படுகிறது. சிவசக்தி, விஷ்ணு சக்தி, பிரம்ம சக்தி ஆகிய மூன்று சக்திகளின் வடிவமாகவே கம்பம் உள்ளது.

ஆணவம், கண்மம், மாயை என்ற மூன்றையும் நீக்கக் கூடிய சக்தியாகவே கம்பம் விளங்குகிறது. இறைவன் ஏகன் அநேகன் என்பதை வலியுறுத்துவது கம்பம். மூன்று பாகங்கள் இணைந்து ஒரே பாகமாக கம்பம் அமைந்திருக்கும். வழிபாடுகளில் உருவ வழிபாடு, உருவமில்லா வழிபாடு, ஜோதி வழிபாடு என்று பல வகைகள் உண்டு. அதில் மஞ்சள் நீர் கம்பம் வழிபாடு என்பது அனைத்திற்கும் பொதுவானது என்கின்றனர் ஆன்மிக பெரியோர்கள். கரூருக்கு மழை வளம் தரும் தெய்வமாக கரூர் “மாரி”யம்மன் விளங்குகிறாள். ஓவ்வொரு ஆண்டும். கோடை காலத்தில் கம்பம் திருவிழா அன்று கம்பம் சாற்றுதலில் துவங்கி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு வரை அடிக்கடி கண்டிப்பாக மழை பெய்து விடுகிறது.

கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் திருநீறு மருத்துவ குணம் நிறைந்தது. வெண்டா மண் என்று அழைக்கப்படும் இந்த திருநீற்றை பக்தர்கள் நெற்றியில் பூசிக் கொள்வதன் மூலம் தலைவலி, தலையில் நீர் கோர்த்தல், கண் சம்பந்தமான நோய்கள், தோல் நோய் போன்ற நோய்கள் தீர்ந்து விடுகிறது. இத்தகைய ஒரு அரிய வகை மண், தெய்வீக சக்தி கொண்டதும், பல மருத்துவ குணங்கள் அடங்கியும் உள்ளது.

அம்மனுக்கு மாவிளக்குக் காரி என்ற பெயரும் உண்டு. அவள் திருவிளையாடலில் கண் வலி, புடரி வலி, வயிற்று வலி, தலைவலி என இன்னல் படுவோர் மா விளக்கு எடுத்து நெய் விளக்கேற்றி கோயிலின் முன் தன் நேர்த்திக்கடனை செலுத்தினால் பிணியெல்லாம் பனி போல் விலகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

துன்பம், துயரம், கஷ்டம், இன்னல், இடர் ஏற்படுவதா, ஏற்படுத்திக் கொள்வதா, இதைக் கேள்வியாக முன் வைத்தால் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வது என்பது தான் சரியாகும். அதற்குத் தீர்வு காண அம்மன் சன்னதி, மனதிற்கு நிம்மதி தரும் அந்த சன்னதிக்கு நாமே நம் மனக்கட்டுப்பாடோடு சில நியதிகளை வகுத்துக் கொண்டு நேர்த்திக் கடன்களாய் செய்வதுதான்;. சிறு குழந்தை முதல் பெரியவர் வரை கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, மொட்டை அடித்து தவமிருந்து பெற்ற குழந்தையை கரும்புத் தொட்டிலிட்டு, அக்னியாய் செங்கதிராய் எழும் தீச்சுடர் சட்டியை கரங்களில் ஆற்றிலிருந்து எடுத்து வழிநெடுக ஊற்றப்படும் எண்ணெய் வேகத்திலும் பைய நடை பயின்று ஆலயம் சேர்க்கும் அழகு தனியழகு. உள்ளம் வருத்தி உயிர் மெய் உருக்கி மேனியெல்லாம் அலகு, நாக்கில் அலகு, இடுப்பில் பெரிய அலகு, முதுகுதண்டில் அலகு குத்தி ஏற்ற வண்டியின் மேல் நிறுத்தி பறக்கும் காவடி, பறவைக் காவடி இப்படி எண்ணற்ற காவடிகளை எண்ணமெல்லாம் நிறைந்த தாய்க்கு தன் நேர்த்திக் கடனாய் செலுத்துவதும் முக்கிய நிகழ்ச்சியாகும்.

ஆன்மிகத் தகவல்

கோயில்களில் கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு யாகங்கள் நடைபெறும் போது பக்தர்களிடம் இருந்து பல்வேறு பொருட்கள் இலவசமாக பெறப்படுகிறது. யாகத்திற்காக அளிக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பலன் கிடைப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. அதன்படி யாகத்திற்குரிய பொருட்களும், அதன் பலன்களும் வருமாறு:
பால்-ஆயுள் விருத்தி, வாசனை திரவியம்-ஆயுள் வலிமை, தயிர்-மக்கட் செல்வம், நெய்-மோட்சம் கிட்டும், தேன்-சங்கீத ஞானம், இளநீர்-சத்புத்திர பேறு, கரும்பு சாறு-நித்யசுகம், பலாப்பழம்-உலக வசியம், சந்தன கட்டை-செல்வம், சந்தனாதி தைலம்-சுகம், பச்சை அவல்-குழந்தை பேறு, கற்கண்டு-ரோக நிவர்த்தி, தேங்காய்-அரசுரிமை, மஞ்சள் காப்பு-ராஜசியம், பழங்கள்-செல்வம், பச்சை கற்பூரம்-அச்சம் நீங்கும்.
 
நன்றி : பி.சந்திரசேகர், ஜெனியூன் டிசைனிங்ஸ், வெங்கமேடு, கரூர்.

நண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs

PETTA Audio Launch Updates | Rajinikanth, Vijay Sethupathi, Simran, Trisha

Ragi paal | kelvaragu milk | BABY FOOD for 4 Months old | குழந்தைகளுக்கு கேழ்வரகு / ராகி பவுடர்

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து