தமிழகத்திற்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 81 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை

புதன்கிழமை, 31 மே 2017      நீலகிரி

தமிழகத்திற்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 81 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளாதாக ஊட்டியில் நடைபெற்ற விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் கூறினார்.

நிறைவு விழா

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் ஒரு மாத காலம் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் கோடை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதன்படி இந்தாண்டுக்கான கோடை விழா கடந்த 6_ந் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. கோடைவிழாவின் நிறைவு நாள் விழா ஊட்டியிலுள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரபாண்டியன் வரவேற்று பேசினார். விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்மண்டி ந.நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோடை விழாவில் பங்கேற்ற கலைஞர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுக்கு நினைவுப்பரிசுகளையும், 100 தாய்மார்களுக்கு தாலிக்கு தங்கத்தையும் வழங்கி பேசியதாவது-

மூன்று இடங்களில் நவீன கழிவறை

ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் என்னை பார்க்கும் போதெல்லாம் எனது தொகுதிக்கு ஏதாவது செய்ய வேண்டுமென என்று சொல்லுவார். நானும் செய்து தருகிறேன் என்று சொல்வேன். ஆனால் இன்று(நேற்று) காலை என்னையை சந்தித்த அவர் ஊட்டியில் கோடை விழா சிறப்பாக நடக்கிறது, அதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டுதலை தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் கலெக்டர் பொ.சங்கருக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. அது எங்களுக்கு கிடைத்த பெருமை. ஏனெனில் அவர் எங்கள் மாவட்ட(திருச்சி) செல்லப்பிள்ளை.

ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக படகு இல்லம், சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா ஆகிய மூன்று இடங்களில் நவீன குளியலறை, கழிவறையுடன் கூடிய உடமைகளை பாதுகாப்பு பெட்டக வசதி இந்த நிதியாண்டிலேயே நிறைவேற்றித் தரப்படும். மேலும் ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுற்றுலா வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதிக்கான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த அம்மா அரசு அதனை உடனடியாக நிறைவேற்றித்தரும். அத்துடன் குடிநீர் வசதிகளும் ஒரிரு மாதங்களில் நிறைவேற்றித்தரப்படும் .

81 லட்சம் சுற்றுலாப் பயணிகள்

இந்தியாவிலேயே சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்திற்கு 81 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். திறமையான ஆட்சி நிர்வாகம் தான் இதற்கு காரணம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக நன்றாக பராமரிக்கப்படுகிறது. மறைந்த முதல்வர் அம்மாவிற்கு பிறகு தற்போதைய முதல்வர் பழனிச்சாமி திறம்பட செயல்படுத்தி வருகிறார். இந்தியாவிலேயே தமிழகம் மின் மிகை மாநிலமாக உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் செயல்பாடு அற்புதமாக உள்ளது. தமிழகத்தில் தங்கும் விடுதிகள், அறுசுவை உணவு, சுற்றிப்பார்க்க இடம் ஒருங்கே அமையப்பெற்றுள்ளது. சுகாதாரத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. மறைந்த முதல்வர் அம்மா தமிழகத்தில் கழகம் 100 ஆண்டுகாலம் ஆட்சிசெய்யும் என்று சொல்லியிருக்கிறார். சுற்றுலாப் பயணிகள் வருகையால் தமிழகத்திற்கு பெருமை. இவ்வாறு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசினார்.

விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன் முன்னிலை வகித்து பேசினார். ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் அமர் குஷ்வாஹா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகேசன், கோட்டாட்சியர் கார்த்திகேயன், மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் தேவகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜன் நன்றி கூறினார். 
100 பேருக்கு நிதியுதவி மற்றும் தங்கம் விழாவில் 50 பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கமும், 50 பட்டதாரி அல்லாதவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம் என மொத்தம் 100 பயனாளிகளுக்கு ரூ.37.50 லட்சம் நிதியுதவியும், 800 கிராம் தங்கமும் அமைச்சர் வெல்லமண்டி ந. நடராஜன் வழங்கினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து