முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் அருகே ஏந்தல் கண்மாய் தூர்வாறும் பணி அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் அருகே ஏந்தல் கண்மாய் தூர்வாரும் பணியினை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
 ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், ஆர்.எஸ்.மடை ஊராட்சிக்குட்பட்ட பால்கரை கிராமத்தில் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் தாய் திட்டம் -2 மூலம்  ஊரக பகுதிகளில் உள்ள கண்மாய்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ஏந்தல் கண்மாயினை தூர்வாறும் பணிகளை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியினை பின்பற்றி செயல்படும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் பொதுமக்களுக்கு சிரமமின்றி சென்றடையும் வகையில் செயல்பட்டு வருகின்றது.  குறிப்பாக ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் ஊரக பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில்  கிராமங்களில் குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, சிமெண்ட் சாலை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி ஒவ்வொரு ஊராட்சிகளிலும் தன்னிறைவு பெற்ற கிராமமாக உருவாக்கிட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் தாய் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் தற்போது ஊராட்சி ஒன்றிய பராமரிப்பில் உள்ள சிறுபாசன கண்மாய்களில் தூர்வாறும் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 
 அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2016-2017 நிதியாண்டில் தாய் திட்டம் -2 கீழ் ரூ.9.27 கோடி மதிப்பில் 42 சிறுபாசன கண்மாய்களை தூர்வாறி, பாசன வசதிக்காக மடைகள் மற்றும் கழுங்குகளை புணரமைப்பு செய்திடும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஆர்.எஸ்.மடை ஊராட்சி பகுதியைச் சார்ந்த பொதுமக்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் விதமாக பால்கரை கிராமத்தில் உள்ள ஏந்தல் கண்மாயினை தூர்வாறும் பணிகளை துவக்கி வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.  மேலும் தற்போது தாய் திட்டம்-2 கீழ் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊரக பகுதிகளில் இதர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.12.46 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் துவங்கப்பட்டுள்ளன. 
 மேலும் விவசாயிகள் தங்களது விலை நிலங்களில் உள்ள மண்ணின் தன்மையினை செரிவூட்டும் விதமாகவும், நீர் நிலைகளை ஆழப்படுத்தி எதிர்வரும் மழைக்காலத்தில் அதிகளவில் மழைநீரை சேமித்திட ஏதுவாகவும், கண்மாய்கள் மற்றும் ஊரணிகளில் படிந்துள்ள வடிமண் படிவங்களை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் 4,586 நீர்நிலைகளில் உள்ள களிமண் படிவங்களை எடுத்துக்கொள்ள மாவட்ட அரசிதழில் அறிவிப்பு செய்யப்பட்டு தற்போது வரை 8,345 விவசாயிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் விவசாயிகளின் நிலங்களில் இயற்கை வளம் நிறைந்ததாக மண்ணின் தன்மை மேம்படுவதோடு நீர்நிலைகளும் ஆழப்படுத்தப்பட்டு சீர்செய்யப்படுகின்றது. 
 அதேபோல, குடிமராமத்து திட்டப்பணிகளின் கீழ் பொதுமக்களின் 10 சதவித பங்களிப்புடன் ரூ.1.48 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 19 கண்மாய்களை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 2017-18ம் ஆண்டில் 800 பண்ணைக்குட்டைகள் அமைத்திட திட்டமிடப்பட்டு இதுவரை 319 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்திடும் விதமாகவும், நீர்நிலைகளை மேம்படுத்திடும் விதமாகவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி, ராம்கோ கூட்டுறவு தலைவர் செ.முருகேசன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை உட்பட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து