முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகாசி விசாகத்திருவிழா திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த பாதயாத்திரை பக்தர்கள்

திங்கட்கிழமை, 5 ஜூன் 2017      தூத்துக்குடி

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை வைகாசி விசாகத்திருவிழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு கோவில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.

10 நாட்கள் திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தமிழ்கடவுள் முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா, வைகாசி வசந்த விழாவாக பத்துநாட்கள் நடக்கிறது. இத்திருவிழா இவ்வாண்டு கடந்த 29ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. திருவிழா நாட்களில் தினமும் மாலையில் கோயிலில் உச்சிகால தீபாராதனைக்குப் பின்பு சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோவிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்ந்து, அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

நாளை வைகாசி விசாகம்

அதனைத்தொடர்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவம் நடந்தது. இவ்வைபவத்தின் போது ஓவ்வொரு சுற்றிலும் வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ், பிரம்மதாளம், நந்தி மத்தளம், சங்கநாதம், பிள்ளைத்தமிழ், நாதசுரம், வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு, கப்பல் பாட்டு முதலானவைகள் பாடப்பெற்றது. அதன்பின்னர் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து திருக்கோயில் சேர்ந்தார். பத்து நாட்கள் நடைபெறும் வசந்த திருவிழாவின் நிறைவு நாளான நாளை ஜுன் 7-ம் தேதி விசாகத்திருவிழா நடக்கிறது.

நடை திறப்பில் மாற்றம்

வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு திருக்கோயில் நாளை அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கிறது.

சாப விமோசன நிகழ்ச்சி

மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை ஆகி, தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து திருக்கோயில் சேர்ந்து திருவிழா நிறைவு பெறுகிறது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று ஜுன் 6-ம் தேதியும், நாளை மறுநாள் ஜுன் 8-ம் தேதியும் கோவில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, தொடர்ந்து பூஜைகள் நடக்கிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து