கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையில் ஆசியாவில் முதல் முறையாக இரண்டு இருதயம் பொருத்தி சாதனை

புதன்கிழமை, 7 ஜூன் 2017      கோவை
Scan

கே.எம்.சி.எச். மருத்துவமனை ஆசியா கண்டத்திலேயே முதல் முறையாக ஹெடெரோட்டோபிக் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் இது குறித்து மருத்துவமனைத் தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிச்சாமி கூறியதாவது.

இருதய மாற்று அறுவை சிகிச்சை

கே.எம்.சி.எச் மருத்துவமனை அனைத்து நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும், மாற்று அறுவை சிகிச்சை செய்வதிலும் சிறந்து விளங்குகிறது. இதன் தொடர்ச்சியாக  ஆசியாவிலேயே முதல் முறையாக இருதய துடிப்புடன் ஹெட்ரோடாபிக் இருதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளது. கே.எம்.சி.எச் மருத்துவமனையில் மட்டும் தான் முதல் முறையாக இருதய துடிப்புடன் ஹெட்ரோடாபிக் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில்   குறிப்பிடக்கூடிய அம்சம் என்னவென்றால் அந்த நபருக்கு பொருத்தப்பட்ட இரண்டு இருதயங்களில் ஒன்று ஒரு பெண்ணுடையது.  இந்த அரிய இருதய மாற்று அறுவை சிகிச்சையானது  இருதய தமனி குழாய்களை நேரடியாக இணைக்கும் மருத்துவ தொழில்  நுட்பத்தை பயன்படுத்தி நோயாளியின் இருதயம் இயங்கிக்கொண்டிருக்கும் போதே செய்யப்பட்டது. 45 வயதுள்ள விக்னேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு நுரையீரல் பகுதியில் உயர்ந்த அழுத்தம் இருந்த காரணத்தால் அவரால் வழக்கமான முறையில் இருதய மாற்று  அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியவில்லை. அதனால் அவருக்கு இந்த புதுமையான இருதய மாற்று அறுவை சிகிச்சையை  இருதயம் இயங்கிக் கொண்டிருக்கும்போதே  செய்யப்பட்டது.

இரண்டு நாளங்கள் 

பொதுவாக இரண்டு ரத்த நாளங்கள் சுத்தமான ரத்தத்தை எடுத்து செல்கின்றன. மற்ற மூன்று ரத்த நாளங்கள் அசுத்த ரத்தத்தை வெளியேற்றுகின்றன. இரண்டு இருதயங்களின் இடது பகுதியில் வைக்கப்பட்டுள்ள இந்த இரண்டு நாளங்களும்  இரண்டு இருதயங்களும் சுத்த ரத்தத்தை பகிர்ந்து கொள்வதை உறுதி  செய்கின்றன.  வலது பகுதியில் மேல்பெருஞ்சிரை,  கீழ்ப்பெருஞ்சிரை மற்றும் இதய தமனி என்ற மூன்று இணைப்புகள் உள்ளன. இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்பவரின் உடல் எடை, ரத்த வகை மற்றும் வயது ஆகியவை இருதய தானம் செய்பவருடன் ஒப்பிடுகையில் ஒரேமாதிரியாக இருக்க வேண்டும். இது போன்ற அறுவை  சிகிச்சைகள் செய்வதற்கு முன்பு  இந்த விவரங்களை நாங்கள்  ஒப்பிட்டு அலசிய பிறகே சிகிச்சையை செய்வோம். ஆசியாவில் முதல் முறையாக  மருத்துவமனையில் இந்த புதுமையான இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. மேலும் இந்த அறுவை சிகிச்சை பற்றிய ஒரு கட்டுரை சர்வதேச இருதயம் மற்றும் மாற்று இருதய அறுவை சிகிச்சை இதழில் வெளியிடப்படும்.

இந்த சவாலான அறுவை சிகிச்சையை மருத்துவமனையின் டாக்டர்கள் பிரஷாந்த் வைஜயநாத் தாமஸ் அலெக்சாண்டர் சுரேஷ்குமார் விவேக் பதக் ஆகியோர் வெற்றிகரமாகச் செய்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து