முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      தூத்துக்குடி
Image Unavailable

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.  பாத யாத்திரை பக்தர்கள் கூட்டத்தால் கோயில் வளாகம் திணறியது.

வைகாசி விசாக திருவிழா

அலை வீசும் கடலருகே அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடக்கும் பல்வேறு விழாக்களில் சிறப்பு வாய்ந்த வைகாசி விசாக திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாக நட்சத்திர தினத்தன்று வைகாசி விசாக பெருந்திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆண்டும் முழுக்க முருகனை தரிசனம் செய்தால் கிடைக்கும் பலன்கள் விசாக திருவிழாவன்று முருகப்பெருமானை தரிசித்தால் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அபிஷேகம் மற்றும் ஆராதனை

இத்தகை சிறப்பு வாய்ந்து வைகாசி விசாக திருவிழா கடந்த 29ம் தேதி துவங்கியது. வைகாசி விசாக திருவிழாவையட்டி நேற்றுஅதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், வைகாசி விசாகத்தை முன்னிட்டு சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து காலை 11 மணிக்கு மூலவருக்கு உச்சிகால தீபாராதனை நடந்தது. மாலை 3 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது.

சாபவிமோச்சன நிகழ்வு

அதன்பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கசப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தை வந்து சேர்ந்தார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாபவிமோச்சனம் அளிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. அங்கு சுவாமிக்கு ஜெயந்திநாதருக்கு அபிஷேகம் அலங்காரம் ஆனதும் 11 முறை வசந்த மண்டபத்தில் வலம் வந்து மீண்டும் கோயிலை சேர்ந்தார

புனித நீராடிய பக்தர்கள்

வைகாசி விசாகத்தை முன்னிட்டு அதிகாலை முதலே முருகபக்தர்கள் கடலிலும் நாழிகிணற்றிலும் நீராடி நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். விசாக திருவிழாவையட்டி சுவாமி மூலவர் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக ரூ.250, 100, 20 என சிறப்பு தரிசன வழிகளும், பொது தரிசனம் முறையிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் நேர்த்திகடன்

மேலும் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த பாத யாத்திரை பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர்காவடி உள்ளிட்ட பல்வேறு காவடி எடுத்தும், நீண்ட வேல்களால் அலகு குத்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இந்தாண்டு மழை பொய்த்து போனதால் விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்து உணவு தானியங்களை குறைவான அளவிலேயே கோயிலுக்கு நேர்த்தி கடனாக வழங்கினர். வைகாசி விசாகத்தையட்டி நேற்றுமுன்தினம் மாலையிலிருந்து விடிய விடிய, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ரோடுகளில் பாத யாத்திரை பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்ப்ட்டது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

விழாவையட்டி தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அரசு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. தூத்துக்குடி எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ் தலைமையில் டி.எஸ்.பி. தீபு மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் வரதராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து