முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாக விழா பணிகள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ ஆய்வு

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      தூத்துக்குடி
Image Unavailable

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வைகாசி விசாகம் 06.06.2017 முதல் 08.06.2017 முடிய மூன்று நாட்கள் நடைபெறுவதை முன்னிட்டு கலெக்டர் என்.வெங்கடேஷ், தலைமையில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பயணியர் விடுதி சாலை, பேரூந்து நிலையம் ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.பின்னர்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்ததாவது:

 சிறப்பான ஏற்பாடுகள்

தமிழ்நாட்டில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகம் ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 06.06.2017 முதல் 08.06.2017 முடிய மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வைகாசி விசாகத்திற்கு திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு சிறப்பான முறையில் அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் மூலம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போக்குவரத்து வசதி

மேலும், திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்கும் பயணியர் விடுதி அருகில் உள்ள சாலையில் கழிவு நீர் வெளியேறி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு உடனடியாக அதனை சரிசெய்ய பேரூராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் இந்நிகழ்ச்சிக்கு வருகைதர உள்ளதால் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதா என பேருந்து நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். திருக்கோயில் வளாகம், பக்தர்கள் தங்கும் விடுதி, பேரூந்து நிலையம் ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு காவல்துறையின் மூலம் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செயல்படுத்தப்பட்டு வருவதை ஆய்வு செய்தார். தமிழ்நாடு அரசு திருக்கோயிலுக்கு வருகைத்தரும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சுவாமி தரிசனம் செய்ய பேட்டரிகார் மூலம் அவர்களை அழைத்துச்செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

அடிப்படை வசதிகள்

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர், சுகாதாரம், மின்சார வசதி, போக்குவரத்து வசதி ஆகியவற்றை முறையாக வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருக்கோயிலுக்கு  வருகைதரும் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் கடல் பாதுகாப்பு வளையத்துடன் தீயணைப்புத்துறையினரும், உயிர் மீட்பு படகுடன் மீன்வளத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தயார் நிலையில் மருத்துவ சேவை

திருவிழா காலம் மழைக்காலம் என்பதால் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறையின் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருக்கோயில் வளாகத்தில் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை பெறும் வசதியுடன் மருத்துவர்கள்  பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்தார்கள்.

பலர் பங்கேற்பு

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ்,இ.கா.ப., ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சுந்தர்ராஜ், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், திருச்செந்தூர் கோட்டாட்சியர் கணேஷ்குமார், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் அருணாச்சலம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் டி.நவாஸ்கான், வட்டாட்சியர் அழகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து