கும்பகோணம், பாபநாசம், அய்யம்பேட்டை ஆகிய இடங்களில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் : கலெக்டர் ஆ.அண்ணாதுரை நேரில் ஆய்வு

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      தஞ்சாவூர்
Thanjai 2017 06 08

பாபநாசம் வட்டக் கிடங்கில் பணி செய்யும் லோடுமேன் மேஸ்த்திரி (மேலாளர்) தற்காலிக பணி நீக்கம் செய்தும், கிடங்கு பொறுப்பாளர் மற்றும் கிடங்கு பில் கிளார்க் ஆகிய இரண்டு நபர்களும் உடனடியாக பணியிலிருந்து விடுவித்து, மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, அதிரடியாக உத்திரவிட்டார்.

கலெக்டர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், பாபநாசம், அய்யம்பேட்டை ஆகிய இடங்களில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீர் வசதி போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, நேற்று (08.06.2017) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கும்பகோணம் கிளைச்சிறைசாலையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை மற்றும் சிறைசாலைகளில் வசதிகள் குறித்தும், கும்பகோணம் கருவூலத்தில் பணிகள் குறித்தும், அய்யம்பேட்டை பேரூராட்சி பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். அய்யம்பேட்டை பேரூராட்சி நேரு நகரில் தார் சாலை அமைப்பது தொடர்பாகவும், பசுபதி கோவில் ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் 2வது தெருவில் கழிவு நீர் வெளியேற்றப்படுவதையும், பேருந்து பயணிகள் நிறுத்த நிழற்குடை ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார். பேருந்து பயணிகள் நிழற்குடையில் உட்பகுதியில் போஸ்டர்கள் அதிக அளவில் ஒட்டப்பட்டு, சுகாதரமற்ற நிலையில் இருந்ததை கண்டு உடனடியாக போஸ்டர்களை அகற்றி குப்பைகள் இல்லாமலும், கழிவு நீர் கால்வாயில் பிளாஸ்டி பை, குப்பைகள் இல்லாமல் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், பாபநாசம் வட்ட கிடங்கிலிருந்து அங்காடி விநியோகத்திற்கு அரிசி, சர்க்கரை போன்ற பொருட்கள் லாரியில் ஏற்றப்படுவதை ஆய்வு செய்த போது, மூட்டைகளில் எடை குறைபாடுகள் காணப்பட்டதால், சம்பந்தப்பட்ட லோடுமேன் மேஸ்த்திரி (மேலாளர்) தற்காலிக பணி நீக்கம் செய்தும், மேலும் கிடங்கில் பொறுப்பாளர், கிடங்கு பில் கிளார்க் ஆகிய இரண்டு நபர்கள் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டுமென்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அவர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, உத்திரவிட்டார்.

இவ்வாய்வின் போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிமாறன், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் இளங்கோவன், பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், மாவட்ட கருவூல அலுவலர் நடராஜன், பாபநாசம் வட்டாட்சியர் ராணி மற்றும அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து