முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளிகளில் தேர்ச்சி அதிகரிக்க நன்னடத்தை குழுக்கள்: முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் தகவல்

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      திருவண்ணாமலை

 திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாணவர் நன்னடத்தை குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டின் தொடக்கத்திலேயே வேலைவாய்ப்பு வழகாட்டி நிகழ்ச்சியை நடத்த வுள்ளனர்.

 பாட புத்தகங்கள்

தமிழகத்தில் 2017-18ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் நேற்று முன்தினம் தொடங்கியது. பள்ளி தொடங்கிய முதல் நாளிலேயே மாணவர்களுக்கான புத்தகங்கள் குறிப்பேடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டன. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் 2 லட்சத்து 54 ஆயிரத்து 330 மாணவர்கள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில படிக்கும் 43 ஆயிரத்து 589 மாணவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 97 ஆயிரத்து 919 பேருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. நடப்பு கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் கூடுதல் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு முடிவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் சிறப்பிடம் பிடித்துள்ளனர். எனவே கற்பி, தெளிவாக்கு, மேம்படுத்து என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பெற்றோர் மத்தியில் விநியோகம் செய்யப்படுகிறது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 5 முதல் 10 சதவீதம் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் மற்றும் அதன் முடிவுகள் வெளியிடப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வகுப்பு தொடக்கத்தில் இருந்தே தேர்வுக்காக மாணவர்களை தயார் செய்யும் பணியை தொடங்கியுள்ளனர். இதற்காக மாணவர்கள் வகுப்புக்கு வருகை தருவதை காலை, பிற்பகல் மற்றும் மாலையில் உறுதிபடுத்தவுள்ளனர். இதனை வகுப்பாசிரியர், உதவி தலைமை ஆசிரியர், தலைமை ஆசிரியர், ஆகியோர் கண்காணிப்பார்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்தால் அவர்களை ஊக்குவிக்கும் திட்டங்களையும் செயல்படுத்தவுள்ளனர். அரசு பள்ளிகளில் மாணவர்கள் நன்னடத்தை குழு அமைக்கவுள்ளனர். இதில் பெற்றோர் ஆசிரியர் கழகம், ஊர் முக்கிய பிரமுகர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் இடம்பெறுவார்கள். இவர்கள் மாணவர்களின் நடத்தைகளை ஆய்வு செய்வதுடன் அதை சரி செய்ய முயற்சி மேற்கொள்வார்கள். மாணவர்களின் வாசிப்பு திறனை வளர்க்கவும், அறிவியல், கணித குழுக்கள் ஏற்படுத்தப்படும். பெற்றோர் இல்லாத மாணவர்களை ஆசிரியர் பராமரிப்பில் படிக்க வைக்கவுள்ளனர்.

10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு நாள்தோறும் தேர்வுகள் நடத்தப்படும் அன்றைய தினமே தேர்வு தாளை திருத்தி பெற்றோரிடம் கையெழுத்து பெறவுள்ளனர். ஒவ்வொரு வகுப்பின் முடிவிலும் பாடங்கள் குறித்த சந்தேகங்களை எழுப்பி மாணவர்கள் விளக்கம் பெறவேண்டும். இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் கூறும்போது மாவட்டத்தில் அரசு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தேவையான அனைத்து திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம் அரசு பொதுத் தேர்வுக்கான தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து வரும் ஆண்டுமுதல் 5 இடங்களுக்கு இடம்பெற முயற்சி செய்வோம். அரசு சார்பில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டு நிகழ்ச்சி இம்மாதம் இறுதியில் நடத்தப்படும். இதன்மூலம் மாணவர்களுக்கான எதிர்கால இலக்கு முன்கூட்டியே நிர்ணயிக்கப்படும் என்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து