முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் பிரச்சினையை அரசியலாக்குகிறார் ராகுல்: வெங்கய்யா நாயுடு குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தை ராகுல் காந்தி அரசியலாக்குகிறார் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மாநிலத்தில் உள்ள மாந்த்சவூர் மாவட்டத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் விவசாயிகள் 5 பேர் பலியானார்கள். சம்பவம் நடந்த இடத்திற்கு ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் செல்ல முயன்றபோது நேற்று கைது செய்யப்பட்டனர்.

மாந்த்சவூர் பகுதிக்கு ராகுல் செல்ல முயன்றதற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். விவசாயிகள் பிரச்சினையை அரசியலாக்க ராகுல் காந்தி முயற்சி செய்கிறார் என்று நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த வெங்கய்யா நாயுடு குற்றஞ்சாட்டினார். போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் விவசாயிகள் 5 பேர் பலியானதற்கு பொறுப்பேற்று மத்தியப்பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் பதவி விலக வேண்டும் என்ற ராகுல் காந்தியின் கோரிக்கையை வெங்கய்யா நாயுடு நிராகரித்தார். மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் முதல்வராக திக்விஜய்சிங் இருந்தபோது கடந்த 1998-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி பெதுல் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 24 விவசாயிகள் பலியானார்கள் என்றும் பழைய சம்பவத்தை வெங்கய்யா நாயுடு நினைவு படுத்தினார்.

இதற்காக திக்விஜய் சிங் முதல்வர் பதவியில் இருந்து விலகினாரா என்றும் நாயுடு கேள்வி எழுப்பினார்.  தற்போது விவசாயிகள் பிரச்சினையை காங்கிரஸ், அரசியலாக்குகிறது. இதை காங்கிரஸ் நிறுத்திக்கொள்வதோடு மாமூல் நிலைக்கு திரும்ப உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். புகைப்படங்களுக்கு போக்ஸ் கொடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்வதற்காக மாந்த்சவூருக்கு செல்ல ராகுல் காந்தி முயற்சி செய்கிறார். முதல்வர் சிவராஜ் சிங் செளகான், விவசாயிகளின் தோழன். விவசாயிகளின் நலன்களுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்றும் நாயுடு மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து