அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவருக்கு தோட்டக்கலைத்துறையினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      நீலகிரி

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கி மெக் ஐவருக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

பூங்காவை உருவாக்கியவர்

ஊட்டியில் உள்ள உலக புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவானது  கடந்த 1848ம் ஆண்டு பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு பல நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட பல்வேறு வகையான மரங்கள் நடப்பட்டு 1867ம் ஆண்டு பணிகள் நிறைவு பெற்றது. சுமார் 19 ஆண்டுகள் அயராது பாடுபட்டு இப்படி ஒரு பூங்கா உருவாக காரணமாக இருந்தவர் ஆங்கிலேயர் ஜான் மெக் ஐவர். ஊட்டியில் அரசு தாவரவியல்  பூங்கா அமைய காரணமாக இருந்த மெக்கைவர் கடந்த 08.06.1876ம் ஆண்டு ஊட்டியில் காலமானார். இவரது உடல் ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள ஸ்டீபன் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவரது கல்லறைக்கு ஆண்டுதோறும் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

141_வது நினைவு தினம்

இந்த நிலையில் அவரின் 141_வது நினைவு தினமான நேற்று அவரது கல்லறையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை துணை இயக்குநர் உமாராணி, அரசு தாவரவியல் பூங்கா தோட்டக்கலை உதவி இயக்குநர்(பொ) ஸ்ரீ வித்யா, தோட்டக்கலை அலுவலர் வித்யா மற்றும் பூங்கா பணியாளர்கள் கலந்து கொண்டு மெக் ஐவர் கல்லறையில் மலர்வளையம் வைத்து பிராத்தனை செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து