முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஞ்சநேயன் ஏன் அனுமன் ஆனான்!

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2017      ஆன்மிகம்
Image Unavailable

“மகனே! உன் அறிவை என்னென்பேன்! பெரியோர்கள் தேடிய உணவை உண்ணுதல் சிறந்த மகனுக்கு அழகாகாது என்று எண்ணுகின்றாயா? இவ்வளவு இளம் பருவத்திலேயே உனக்கு இத்தகைய அறிவா? நான் உயிரோடிருக்கும் வரை நீ உழைக்க வேண்டாம். நான் இறந்த பிறகு வேண்டுமானால் உன் விருப்பம் போல் செய். அதுவரை என் பாதுகாப்பிலேயே நீ வளர்ந்து வருவாயாக!” என்று ஆஞ்சநேயன் தாய் அஞ்சனை கூறினாள்.

இது கேட்ட மாருதி மிகப் பணிவுடன் தன் தாயிடம் கூறினான்; “அம்மா!‘தாய்சொல் மிக்க மந்திரம் இல்லை’  என்பதை நான் அறிவேன். தங்களை எதிர்த்துப் பேசுவதாக நினைக்க வேண்டாம்! என்னைப் பெற்றெடுத்த தெய்வமே! தங்கள் மணிவயிற்றில் என்னைப் பலகால் சுமந்தீர்கள். பெறுதற்குரிய துன்பமுடன் என்னைப் பெற்றெடுத்தீர்கள். ஈயெறும்பு முதலியன என் மீது மொய்க்காமல் இரவு பகலாகப் பாதுகாத்தீர்கள்! நான் நோயால் வருந்தினால், எனக்காகத் தாங்கள் மருந்து உண்டீர்கள். சிறந்த காய்கனிகள் கிடைத்தால், அதைத் தாங்கள் உண்ணாமல் எனக்கே கொண்டு வந்து கொடுத்தீர்கள். இவ்வாறு என்னை அன்புடன் வளர்த்த தங்களுக்கு எத்தனைப் பிறவி எடுத்தால் கைம்மாறு செய்ய முடியும்?  இனியும் நான் தங்களிடம் கடன்பட வேண்டுமா? தங்களுக்கு உதவி செய்ய எனக்கு வாய்ப்புத் தாருங்கள், தாயே!” என்று உள்ளம் உருகி வேண்டினான். இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த அஞ்சனையின் கண்களில் நீர் ஆறாய்ப் பெருகியது. இப்படிப்பட்ட நன்மகனைப் பெற்றதை எண்ணி இறும்பூதெய்தினாள். குழந்தையைத் தழுவி அணைத்தாள்; உச்சி மோந்தாள்; ஆனந்தக் கண்ணீர் பெருகச் சில சொற்களைச் சொல்லலானாள்:

“மகனே! நான் உன்னைப் பெற்றதனால் பெரும் பாக்கியவதி ஆகிவிட்டேனடா! புல மக்களை நான் பெற்று மகிழ்வதைவிட, உன் ஒருவனால் மட்டுமே என்னால் பேரின்பம் எய்த முடியும். என் பிள்ளைச் செல்வமே! பிறவிதோறும் நீயே மகனாக வரவேண்டும் என்று இறைவனை நான் வேண்டிக்கொள்ளப் போகிறேன்,’ என்று அஞ்சனை தன் மகனைப் பாராட்டினாள். மேலும் கூறலானாள்:
கண்ணே! உன் எண்ணம் போலவே இனி உழைத்துச் சாப்பிடுவாயாக! இந்த மலைச்சாரலில் காணும் மரஞ்செடி கொடிகளைப் பார்! இவற்றில் கிடைக்கும் சிறந்த காய்களையும், கனிகளையும், நாம் உணவாகக் கொள்ளலாம். எதிரே தோன்றும் காடுகளையும், மலையுச்சிகளையும் பார்! அங்கெல்லாம் செல்லாதே! அவை துன்பந் தரும் வழிகளையுடையவை. உயர்ந்த மரங்களில் ஏறாதே! மலைச்சாரலை விட்டு மலையுச்சிக்குச் செல்லாதே! சிகரங்கள் உயரமானவை. அவற்றின் மேல் ஏறிக் கைகால்களை உடைத்துக்கொள்ளாதே! நான் செல்லும் இடங்கள் தோறும் என்னுடனே சில நாள் வந்து பார்! நான் எவற்றை உண்கின்றேனோ அவற்றையெல்லாம் நன்றாகக் கவனித்து வா! காய், கனி, கிழங்குகளில் நல்லனவும் உள் தீயனவும் உள. தேர்ந்து உண்ணல் வேண்டும். ஆராயாது உண்டால் உயிருக்கே ஆபத்தாய் முடிந்தாலும் முடியும்,” என்று உண்ணற்குரிய பொருள்களையும், பெற வேண்டிய இடத்தினையும், தேர்ந்து கொள்ள வேண்டிய முறையினையும் நன்கு விளக்கினாள், அஞ்சனை. இவ்வாறு, சில நாட்கள் அஞ்சனையின் சொற்கேட்டு அதன்படி மாருதியும் அன்னையுடன் வாழ்ந்து வரலானான். ஒருநாள், தன் தாயைப் பிரிந்து மாருதி மட்டும் தனித்துச் சோலையுள் புகுந்தான். அப்பொழுது, அஞ்சனை உறங்கிக் கொண்டிருந்தாள். மாருதி சோலையினை ஒரு வலம் வந்தான். பின்னர் திடீரெனக் கிழக்கே நோக்கினான். கீழ்வானில் தகதகவெனும் சூரியனைக் கண்டான். அதனையும் ஒரு கனியெனவே தன் மனத்துட்கொண்டான். அதனைப் பறித்துண்ணக் கருதி அதனை நோக்கிப் பாயலானான்.

இவன் பாய்ந்த வேகத்தில் சோலைகளில் இருந்த மரஞ்செடி, கொடிகளும், மலைகளும,; திசைகளும் சுழன்றன. இவன் ஆற்றல் கண்டு தேவர் மூவரும் கூடத் திகைத்து நின்றனர்.

மாருதி சென்று கொண்டே இருந்தான். சூரிய மண்டலத்தை நெருங்கலானான். மாருதி செல்லுவதை இராகு என்னும் கோள் கண்டுவிட்டான். “சூரியனைப் பற்றும் உரிமை எனக்கு மட்டுமே இதுவரை இருந்து வந்துள்ளது. எனக்குப் போட்டியாக யாரோ ஒருவன் அச்சமின்றிப் பகலவனை நோக்கிச் செல்கின்றானே! சூரியனும் அவனைக் காய்ந்து கொல்லவில்லையே! குளிர்ந்த கிரணங்களையன்றோ அவன் மேல் வீசுகின்றான்! இது என்ன விந்தை!” என்று எண்ணியவனாய்த் தன் குறையைத் தேவர் தலைவனாகிய இந்திரனிடம் எடுத்துக் கூறினான். “ நீ போய்ச் சூரியனை விரைவில் பற்றிக்கொள். நான் தொடர்ந்து வந்து நடக்க வேண்டியவற்றைக் கவனித்துக் கொள்கிறேன்” என்று இராகுவுக்குக் கூறி அனுப்பினான் இந்திரன். இதற்குள், மாருதி சூரிய மண்டலத்தை நெருங்கலானான். மாருதியையும் விஞ்சி இராகு விரைந்து பறந்தான். மாருதி இராகுவைக் கண்டுவிட்டான். சூரியன் மேல் பாய்வதை விட்டு, மாருதி இராகுவின் மேல் பாயலானான். பயந்து நடுங்கிப் போன இராகு, இந்திரனிடமே சென்று சேரலானான். இராகு பயந்து வருதலைக் கண்ட இந்திரன், மாருதி மேல் சினம் கொண்டான். மாருதியை மாய்த்து வருமாறு வெள்ளை யானையை ஏவினான். வெள்ளை யானையையும் ஒரு கனியெனவே கருதினான் மாருதி. குழந்தைகட்குத் தேள்கூட உணவுப் பொருளாகத் தோன்றுதல் இயற்கைதானே!

வெள்ளை யானையைப் பற்றக் கருதி அதன் மேல் மாருதி பாய்தலைக் கண்டு தேவர்கோன் வெகுண்டான். தன் கையிலிருந்த வச்சிரப் படையை எடுத்தான். ஆஞ்சநேயனை நோக்கி வீசினான். குலிசம் என்னும் வச்சிரப்படை தாக்கியதால் மாருதி மூர்ச்சையுற்றுக் கீழே விழுந்தான். தன் மகன் தரை மேல் வந்து விழுந்ததை வாயுபகவான் கண்டான். உணர்விழந்த தன் மகன் நிலைகண்டு உள்ளம் வெதும்பினான். பெற்ற வயிறு பற்றி எரிந்தது. தன் மைந்தன் நிலையைக் காணச் சகியாதவனாய்க் கண்ணீர் விட்டுப் புலம்பினான். குழந்தைப் பாசத்தைக் கடவுளாலும் கடக்க முடியாது என்பது எவ்வளவு உண்மை! வாயுதேவன் தன் மகனைத் தோள்மேல் போட்டுக் கொண்டு மலைக்குகை ஒன்றின் உள்ளே சென்றுவிட்டான். காற்றளித்து உலகைக் காக்கும் தன் கடமையை மறந்தான். புத்திரன் நிலைகண்டு புலம்பிக் கொண்டிருந்தான்.

வாயு தன் கடமையைச் செய்யாததால் காற்று என்பதே எங்கும் இல்லை. உயிரினங்கள் மூச்சுவிட முடியாமல் திக்குமுக்காடின. தேவர்களும், காற்றில்லாமையால் உடல் பருத்து, நடக்கவும் நாதியற்று மரங்களைப் போல் நின்றனர். பாம்பு உருவமுடைய நாகர்கள் துவண்டு வீழ்ந்து கிடந்தனர். எல்லா உலகங்களும் காற்றின்மையால் படும் துன்பத்தைப் படைக்கும் கடவுளாகிய பிரமன் கண்டான். வாயுதேவன் இருக்குமிடந்தேடி வந்தான். காற்றின் வேந்தனைக் கண்டு ஆறுதல் மொழிகள் கூறலானான். பின்னர் மாருதியைத் தன் மலர்க்கரங்களால் தடவிக்கொடுத்தான். பிரமன் கைபட்ட அளவில், தூங்கி எழுந்தவனைப் போல, மாருதியும் எழுந்து நின்றான். தன் மகன் விழித்தெழுந்ததைக் கண்ட வாயுதேவன், குகைக்கு வெளியே வந்து உலவலானான். உயிரினங்களும், தேவர்களும், நாகர்களும் வாயுவின் உலவலால் பழைய நிலை பெற்றனர். வாயுதேவனைப் போற்றுவதற்காக, அவன் இருக்கும் இடம் தேடி, வருணன், இயமன், குபேரன், உருத்திரன் முதலான தேவர்கள் வந்து கூடிவிட்டனர்.

வாயு பெற்றெடுத்த ஆஞ்சநேயனைக் கண்டனர். அனைவரும் வாயுதேவன் மனம் மகிழுமாறு, ஆஞ்சநேயனுக்கு வரங்கள் பல தந்து வாழ்த்தினர். அதனோடு, தங்கள் படைகளால் எந்தக் காலத்தும் ஆஞ்சநேயனுக்கு அழிவு வராது என்று உறுதியும், வரங்களும் அளித்து விடை பெற்றுச் சென்றனர். பிரமன் முதலிய தேவர்கள்” அனைவரும் சென்ற பின்னர் சூரியன் வந்தான். “வாயுவின் மைந்தா! எனக்குள்ள ஒளியில் நூற்றில் ஒரு பங்கினை நீ பெறுவாயாக!  எப்படிப்பட்டவரும் என் அருகே வர அஞ்சுவர். நீயோ, என்னைப்பற்றி உண்ணுவதற்காகவே என்னை நோக்கி வந்தாய்! நானும் உன் வீரவிளையாட்டை ரசிக்கவே உன்னைக் காய்ந்து கொல்லவில்லை. நிகரற்ற வீரனாக நீ நிலவுவாயாக! உன்னை இனி யாராலும் வெல்லவோ, கொல்லவோ முடியாது” என்று வாழ்த்திச் சென்றான். பின்னர் இந்திரன் வந்தான். தான் ஏறி வந்த வெள்ளை யானையிலிருந்து கீழே இறங்கினான். மாருதியின் கன்னத்தைத் தடவிக் கொடுத்தான். தன் குலிசப்படை மாருதியின் கன்னத்தைத் தாக்கி வற்றச் செய்து விட்டதைக் கண்டான். வற்றிய கன்னம் நீண்டு விளங்குதலையும் கண்டு வருந்தினான். வருத்தம் தீர வரங்கள் பல தந்து வாழ்த்தினான். “இனி உனக்கு ஹனுமன் (வற்றிய கன்னமுடையவன்) என்ற பெயரே நிலவுவதாக!” என்று கூறி விடை பெற்றுச் சென்றான். அன்று முதல் ஆஞ்சநேயன்,‘அனுமன்’ எனப் பலராலும் அழைக்கப்படலானான்!

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து