முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றால சீசன் துவங்கியுள்ளதை முன்னிட்டு செங்கோட்டைக்கு இரவுநேர சிறப்பு ரயில்களை இயக்கிட சுற்றுலா பயணிகள் கோரிக்கை:

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூன் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-குற்றாலத்தில் குளுகுளு சீசன்   துவங்கியுள்ளதை முன்னிட்டு செங்கோட்டைக்கு இரவு நேர சிறப்பு ரயில்கள் இயக்கிட வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திற்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள குற்றாலம் தென்னகத்து தெய்வீக அருவிகளின் சங்கமம் என்று அழைக்கப்படுகிறது.இங்கு ஒவ்வொரு ஆண்டின் ஜூன் மாதம் முதல் வாரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிடும் போது குற்றாலத்தில் இதமான சாரல் மழையுடன் அனைத்து அருவிகளில் தண்ணீர் கொட்டுவது வழக்கம்.இதில் மூலிகைகளை தழுவிவரும் தண்ணீர் கொட்டுவதால் உடலுக்கு  புத்துணர்ச்சியும் தெம்பும் ஏற்பட்டு நோய்கள் குணமடைகிறது என்று மக்கள் நம்புவதால் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆண்டு தோறும் ஜூன்,ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் குற்றாலத்தில் வந்து குவிந்த குளித்து மகிழ்வது வழக்கம்.இத்தகைய சிறப்புமிக்க குற்றாலத்து அருவிகளில் குளித்து மகிழ்ந்திட தமிழகம்,கேரளா,பாண்டிச்சேரி,கர்நாடகா,ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சுற்றாலாப் பயணிகள்   சாலை மற்றும் இருப்புப்பாதை மார்க்கங்களில் வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
குற்றாலம் செல்வதற்கு,மதுரையிலிருந்து தென்காசி செல்லும் சாலையே அதிகம் பயன்படுத்தப்படுவதால் சீசன் சமயத்தில் இந்த சாலை மார்கத்தில் போக்குவரத்து நெரிசலால் விபத்துகள் ஏற்பட்டு சுற்றுலாப்பயணிகள் உயிரிழப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.இந்நிலையில் மதுரையிலிருந்து குற்றாலத்திற்கு பேருந்தில் செல்வதற்கு அதிககட்டணமும்,ஆபத்தான சாலை மார்கத்தில் பயணிப்பதும்,அதிக நேரமாவதும் இருப்பதால் தற்போது பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் குறைந்த கட்டணத்தில், குதாகலமாக ரயில்களில் செல்வதையே பெரிதும் விரும்புகின்றனர்.ஆனால் குற்றால சீசன் சமயத்தில் வசூலை வாரிவழங்கிடும் மதுரை-தென்காசி மார்கத்தில் ரயில்வே நிர்வாகம் போதிய ரயில்களை இயக்கிடாமல் வருமான இழப்பை சந்தித்து வருகிறது.மேலும் தென்காசிக்கு பகல்நேரங்களில் மட்டுமே ரயில் சேவை இருப்பதால் இரவுநேரங்களில் சாலை பயணங்களை மேற்கொள்வோர் விபத்தில் சிக்கி அநியாயமாக தங்களது இன்னுயிரை இழந்துவருவது வேதனையான விஷயமாகும்.
சென்னை-செங்கோட்டை இடையே தினம் தோறும் இருமார்க்கங்களில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.இதில் சாதாரண நேரத்திலே டிக்கெட் கிடைக்காத நிலையில் குற்றால சீசனுக்கு இந்த ரயில் எந்தவிதத்திலும் உதவாமல் போய்விடுகிறது.அதே போல் மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு தினமும் 3முறை இருமார்க்கங்களிலும் பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.இந்த ரயில் இரவு நேரங்களில் இயக்கப்படாததால் இரவு நேரங்களில் குற்றாலம் செல்லும் பயணிகள் சாலைமார்க்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கும்,விபத்துக்களில் சிக்கி தவித்திடவும் ஆளாக்கப்படுகின்றனர்.இதனால் கடந்த பல ஆண்டுகளாகவே குற்றால சீசன் சமயத்தில் இரவு மற்றும் பகல்நேரங்களில் மதுரை,திருச்சி, சென்னை,கோவை,சேலம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கிட வேண்டும் என்று பொதுமக்களும்,சுற்றுலாப்பயணிகளும் கோரிக்கை விடுத்தும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.ரயில் கட்டணம் பேருந்து கட்டணத்தைவிட குறைவாகவும்,பாதுகாப்பானதாகவும் இருப்பதால் குடும்பத்துடன் குற்றாலம் சென்று திரும்பிட ரயில்பயணத்தையே சுற்றுலாப்பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர்.இருப்பினும் ரயில்வே நிர்வாகம் பொதுமக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது.ரயில்வே நிர்வாகம் மனது வைத்தால் குற்றால சீசன் துவங்கியுள்ளதை முன்னிட்டு சென்னை மதுரை இடையே இயக்கப்படும் ரயில்களை செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்து உதவிடலாம்.
செங்கோட்டையில் உள்ள ரயில்நிலையத்தில் பராமரிப்பிற்கான யார்டு மற்றும் பிட்லைன் போன்ற வசதிகள் இருப்பதால் ரயில்களை நீட்டிப்பு செய்திட வசதிகள் இருப்பதாக கூறப்படுகிறது.தற்போது குற்றாலத்திலுள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டி சீசன் துவங்கியுள்ள  நிலையில் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று பகல் மற்றும் இரவு நேரங்களில் மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்கள் மற்றும் மதுரையிலிருந்து இரவு நேர சிறப்பு ரயில்களை இயக்கிட ரயில்வே நிர்வாகம் உதவிடவேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து