முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகளை மனிதநேயமிக்கவர்களாக வளர்க்க வேண்டும்பெ ற்றோர்களுக்கு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அறிவுரை

திங்கட்கிழமை, 12 ஜூன் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சங்கத்தின் குழந்தைகளுக்கான பாராட்டுவிழாவில் கலந்துகொண்ட அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை மனிதநேயமிக்கவர்களாக வளர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
        ராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் 10வது மற்றம் 12-வது வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற செய்தியாளர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா ராமநாதபுரம் ஜனார்த்தனன் மாளிகையில் நடைபெற்றது. விழாவிற்கு ராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெகஜோதி தலைமை வகித்தார். கவுரவ தலைவர் வால்டர்ஸ்காட், துணை தலைவர் தனபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் குமார் வரவேற்று பேசினார். விழாவில், மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன், உதவி போலீஸ் சூப்பிரண்டு சர்வேஸ்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினர். விழாவில், மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசியதாவது:- பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை கல்வி கற்கும் வயதில் கவனமாக வளர்க்க வேண்டும். அவர்களை நன்றாக படிக்க வையுங்கள். அவர்களுக்கு எந்த கல்வி பிடிக்கும் என்பதை கேட்டறிந்து அதனை தேர்வு செய்து படிக்க வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் உங்களின் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் அமையும். பெற்றோர்களின் மன ஓட்டத்திற்கு ஏற்ப கல்வியை தேர்வு செய்து அவர்களின் மனதில் திணிக்க கூடாது. பெரும்பாலான பெற்றோர்கள் இதுபோன்ற தவறினை செய்து குழந்தைகளின் மன உணர்வினை புரிந்து கொள்ளாமல் எதிர்காலத்தை பாழ்படுத்தி விடுகின்றனர்.
         பெற்றோர்களுக்கு தெரியாதா பிள்ளைகளுக்கு எதை செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கு அனைத்து நிலையிலும் சரியாக வராது. தற்போது காலம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கேற்ப குழந்தைகளை வளர்க்க வேண்டும். எவ்வளவு பெரிய கல்வி கற்றாலும் மனித நேயமிக்க குழந்தைகளாக வளர்க்க வேண்டும். மனித நேயம்தான் இந்த சமுதாயத்தனை சிறந்த இடத்திற்கு கொண்டு செல்லும். தானும் உயர்ந்து தன் சமுதாயத்தையும் உயர்த்தும் நிலை மனித நேயத்தினால் மட்டுமே ஏற்பட முடியும். வாழ்வில் லட்சியம் மிகவும் முக்கியம். நான் எனது கல்வியில் தொடங்கி மருத்துவ பணி என அனைத்திலும் நினைத்ததை லட்சிய உணர்வுடன் எதிர்கொண்டதால் இந்த நிலையை அடைய முடிந்தது. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அமைச்சராகி உள்ளேன். எனது சிறுவயதில் இந்த மாவட்டத்தின் மீது இந்த மக்கள் மீதும் கொண்ட கவலை காரணமாக இன்று அமைச்சராகி என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும், பணிகளையும் மேற்கொண்டு இந்த மாவட்டத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்று வருகிறேன். எந்த அமைச்சராலும் செய்ய முடியாத திட்டங்களை இந்த மாவட்டத்திற்கு செய்து கொடுப்பேன் என்பதில் உறுதியாக உள்ளேன். எனது முயற்சியால் தற்போது சட்டக்கல்லூரி வந்துள்ளது. விரைவில் மருத்துவ கல்லூரி வர உள்ளது.
      மத்திய அரசு தமிழகத்தில் மருத்துவகல்லூரி அமைப்பதற்கு தேவையான நிதி ரூ.17 ஆயிரம் கோடியை தராமல் உள்ளது. அந்த நிதி வந்ததும் இந்த மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி உறுதியாக வரும். இவ்வாறு பேசினார். விழாவில், ராமநாதபுரம் ரோட்டரி சங்க ஆளுநர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாத்துரை, வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், ராமேசுவரம் தீவு சங்க செயலாளர் மோகன், வருவாய்த்துறை அலுவலர் சங்க தலைவர் பழனி, செயலாளர் தமீம்ராசா, செய்தியாளர் சங்கத்தின் இணை செயலாளர்கள் ரகு, முருகேசன், நிர்வாக குழு உறுப்பினர்கள் மோகன், சரவணக்குமார், பரமேஸ்வரன், ரமேஷ், ஆனந்தன், உறுப்பினர்கள் ராமு, பாலசந்தர், குருசாமி, ஆரிப்ராஜா, முகம்மது ரபீக், சோமசுந்தரம், மகேஸ்வரன், முருகன், தாகிர்உசேன், பாகற்செழியன், பாலமுருகன், கயிலைநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.
........................................

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து